Latestமலேசியா

பொதுப் பல்கலைக் கழகங்களில் மாற்றங்கள் தேவை! –இராமசாமி

கோலாலம்பூர், மே.23- நாட்டிலுள்ள அனைத்து பொதுப் பல்கலைக் கழகங்களிலும் முழுமையான மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று பினாங்கு மாநிலத்தின் இரண்டாவது துணை முதலமைச்சரான பி.இராமசாமி ,கல்வி அமைச்சை கேட்டுக் கொண்டுள்ளார்.

முந்தைய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ், அம்னோ கட்சியைச் சேர்ந்தவர்கள் பல்கலைக் கழகங்களில் துறைத் தலைவர்களாகவும், துணை வேந்தர்களாகவும் நியமிக்கப் பட்டனர் என்பதை சுட்டிக்காட்டி, இவ்வாறான தவறான நியமனங்கள் இனிமேல் கொண்டு இடம் பெறக் கூடாது என்பதை பேராசிரியர் ராமசாமி வலியுறுத்தினார்.

25 ஆண்டுகளுக்கு மேலாக பொது பல்கலைக் கழகங்களில் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்ட இராமசாமி, பல்கலைக் கழகங்கள் எது குறித்தும் சொந்த முடிவை எடுக்க முடியாமல் திணறியதை அவர் நினைவு கூர்ந்தார்.

அப்பல்கலைக் கழகங்கள் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரும் தருணத்தில், அவற்றை மறுக்கும் வகையில் கல்வி அமைச்சை சேர்ந்தவர்கள் பல தொல்லைகளை கொடுத்தனர் என்று அவர் தெரிவித்தார்.

“அதுமட்டுமல்லாது, பேராசிரியர்கள் மத்தியில் பன்முகத் தன்மை இல்லை என்று சொல்லலாம். பேராசிரியர்களில் பெரும்பாலோர் மலாய் இனத்தவர்கள் என்பதால், இந்த நிலைமை ஏற்பட்டது. அம்னோவின் அதிகாரத்துவத்தால், மலேசியாவிலுள்ள பல பொதுப் பல்கலைக் கழகங்கள் பல இன்னல்களை சந்தித்தன” என்றார் அவர்.

“உடனடியாக மாற்றத்தைக் கொண்டு வந்து, ‘மாயஜாலத்தை’ பக்காத்தான் ஹராப்பான் நிகழ்த்த வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தேவையான மாற்றங்கள் கொண்டு வரப் பட வேண்டும். பல்கலைக் கழகங்களில் அம்னோவின் ஆதிக்கத்தை குறைக்கலாம். ஒரே இன நிலைப்பாடு குறைக்கப் படலாம் என்று நான் கருதுகிறேன்” என்று அவர் கூறினார்.

“பேராசிரியர்களின் கல்வித் தேர்ச்சியை கருத்தில் கொண்டு, அவர்களின் நியமனங்கள் அமைய வேண்டும். இப்போது உள்ள கல்வி முறையில், ஒழுங்காக எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் பட்டதாரி ஆகி விடுகிறார்கள்” என்று அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker