Latestமலேசியா

ஒரேயொரு திரையரங்கையும் பாஸ் அரசு மூடாது!

கோலத் திரெங்கானு, மே.24- கோலத் திரெங்கானுவில் உள்ள ஒரேயொரு திரையரங்கை ஆட்சிக்கு வந்திருக்கும் பாஸ் அரசாங்கம் மூடிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு அந்தத் திரையங்கம் மூடப்படமாட்டாது என்று அம்மாநில அரசாங்கம் தெளிவுப் படுத்தியது.

பொதுமக்கள் இதுவரை எவ்வாறு திரைப்படங்களை அத்திரையரங்கில் கண்டு களித்து வந்தனரோ, அதேப் போன்று இனிமேலும் கண்டு களிக்கலாம் என்று மாநில சுற்றுலா, கலாசாரம் மற்றும் தொழில்நுட்ப நிர்வாகக் குழுத் தலைவர் அரிஃப்பீன் டெராமான் கூறினார்.

“அத்திரையரங்கை மாநில அரசாங்கம் மூடாது. அது குறித்து திரையரங்கின் உரிமையாளரும், மக்களும் எவ்வித கவலையும் கொள்ள வேண்டாம்” என்று அவர் சொன்னார்.

பிபி செண்டரல் என்ற பகுதியில் அமைந்துள்ள அந்தத் திரையரங்கு லோட்டஸ் பைஃப் ஸ்டார் குழுவின் கீழ் இயங்குகிறது.கடந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கி, அந்தத் திரையரங்கு செயல்பட்டு வருகிறது.

திரையரங்குகள் செயல்பாடு குறித்து தாம் பலமுறை விமர்சித்துள்ளதாக அலூர் லிம்பாட் சட்டமன்ற உறுப்பினரான அரிஃப்பீன் டெராமான் ஒப்புக் கொண்டார். இருந்த போதிலும், திரைப்படங்கள் திரையிடப் படும் நேரம் குறித்து தான் தாம் விமர்சனம் செய்ததாகவும், திரையரங்கின் செயல்பாடு குறித்தல்ல என்றும் அவர் விளக்கமளித்தார்.

“கடந்தாண்டு ரமலான் மாதத்தின் போது, மாநில சட்டமன்ற கூட்டத்தில் நான் கூறியதை பலர் தவறாக புரிந்துக் கொண்டனர். அந்தத் திரையரங்கை இழுத்து மூட வேண்டும் என்று நான் கூறியதாக பல செய்திகள் வெளியாகின. நான் அவ்வாறு கூறவில்லை. திரைப்படங்களை திரையிடும் நேரத்தில் மாற்றம் வேண்டும் என்று தான் நான் கூறினேன்” என்றார் அவர்.

அதுமட்டுமல்லாது, அதிகாலை 1 மணி வரை அத்திரையரங்கில் திரைப்படங்கள் திரையிடப் படுவதாகவும், அது பல விரும்பத்தகாத சமூகத் தீமையை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker