Latestமலேசியா

கைப்பேசியை வாங்கித் தர முன்வந்தார் தந்தை! – அண்ணன் சாட்சியம்

ஜோர்ஜ் டவூன், மே.25- ஆசிரியர் ஒருவரின் கைத்தொலைப்பேசி காணாமல் போன விவகாரத்தில், குற்றஞ்சாட்டப் பட்டு, மனமுடைந்து தற்கொலைச் செய்து கொண்ட எம்.வசந்தப் பிரியாவின் தந்தை, அந்தக் கைத்தொலைப்பேசி கிடைக்காமல் போனால், அதனை தாமே வாங்கித் தருவதாக அந்த ஆசிரியையிடம் கூறினார் என்று வசந்தப் பிரியாவின் 16 வயது அண்ணன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் 24-ஆம் தேதியன்று, அந்தக் காணாமல் போன கைத் தொலைப்பேசி குறித்து அந்த ஆசிரியை, அவரின் கணவர் மற்றும் தனது தந்தை ஆகியோர், வீட்டில் பேசிக் கொண்டிருந்ததை தாம் கேட்டதாக நான்காம் படிவ மாணவரான எம்.மேஹராஜ், இங்கு நடைபெற்று வரும் வசந்தப் பிரியாவின் மரண விசாரணையின் போது டசாட்சியமளித்தார்.

“அந்த விவகாரம் குறித்து தாம் முதலில் விசாரிக்கவிருப்பதாக தந்தை சொன்னார். அதன் பின்னர், அப்படி அந்தக் கைத்தொலைப்பேசி கிடைக்கவில்லை என்றால், அதனை தாமே வாங்கித் தருவதாக அவ்விருவரிடமும் அவர் கூறினார்” என்று அந்த மாணவர் விளக்கினார்.

கிட்டத்தட்ட மாலை 6.45 மணியளவில், அந்த ஆசிரியை மற்றும் அவரின் கணவர் அவர்களின் வீட்டிற்கு திரும்பி விட்டனர். அதன் பின்னர், வசந்தப் பிரியா (வயது 14) கழிவறைக்குச் சென்று விட்டு, தனது அறைக்குச் சென்று விட்டார் என்று மேஹராஜ் சொன்னார்.

சற்று நேரம் கழித்து, தனது அறையில் வசந்தப் பிரியா தூக்கில் தொங்கிக் கிடந்ததை கண்டு தாம் அதிர்ச்சியுற்றதாக அவர் சொன்னார். அப்போது, வசந்தப் பிரியா மூச்சு இல்லை என்றும் மேஹராஜ் கூறினார்.

அதன் பின்னர், வசந்தப் பிரியாவிற்கு அவசரச் சிகிச்சை வழங்கப்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல், அந்த மாணவி வசந்தப் பிரியா பிப்ரவரி 1-ஆம் தேதியன்று மரணமடைந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker