Latestமலேசியா

பினாங்கில் பிரிட்டிஷ் பயணிகள் மீது தாக்குதல்: நடந்தது என்ன? -தெய்வீகன்

ஜோர்ஜ் டவுன், மே.25- இங்குள்ள உணவகம் ஒன்றில், ஏழு இளைஞர்களுக்கும் பிரிட்டிஷ் சுற்றுலா பயணிகளான மூவருக்கும் ஏற்பட்ட தகராறில், பிரிட்டனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி கடுமையான காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார்.

அந்தக் கைகலப்பு தொடர்பில், போலீசார் பினாங்கைச் சேர்ந்த இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.காயமடைந்து சிகிச்சைப் பெற்று வரும் அந்தச் சுற்றுலா பயணி, தவறாக நாற்காலியை இடித்த அந்த இளைஞர்களை நோக்கி தகாத வார்த்தையால் திட்டி, வம்பிழுத்ததால் தான், அவ்விரு கும்பலுக்கும் மத்தியில் சண்டை ஏற்பட்டது என்பது நடத்தப்பட்ட விசாரணை வாயிலாக, தெரிய வந்துள்ளதாக பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ ஏ.தெய்வீகன் கூறினார்.

அதுமட்டுமல்லாமல், அதிகாலை 4 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தின் போது, சம்பந்தப்பட்ட 10 பேரும் மது அருந்தியிருந்தனர் என்றும் தெய்வீகன் தெரிவித்தார்.

“கைது செய்யப்பட்ட அனைவரிடமும் தொடர்ந்து விசாரணை நட்த்தப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரிடமும் பலமுறை நாங்கள் கேள்வி கேட்டு வருகிறோம். சம்பவம் நிகழ்ந்த போது, அவர்கள் மது அருந்தி இருந்ததால், அச்சம்பவத்தை அவர்களால் உடனடியாக நினைவு கூற முடியவில்லை.

பலமுறை விசாரிக்கப் பட்ட பின்னரே, அவர்கள் அச்சம்பவம் தொடர்பில் மேலும் சில விவரங்களை வெளியிட்டு வருகின்றனர்” என்று அவர் சொன்னார்.
“கூடிய விரைவில், யார் யாரை அடித்தனர் என்பதை நாங்கள் கண்டறிந்து விடுவோம்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அச்சம்பவம் கைத்தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டு, சமூக வலைத் தளங்களில் பரவலாகியது. அதனைத் தொடர்ந்து, பினாங்கு மாநிலம், சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான பகுதியா என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது வருந்தத்தக்க விஷயமாகும் என்று தெய்வீகன் கூறினார்.

“பினாங்கு மாநிலம் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான இடம் தான். கடந்த ஆண்டு முதற்கொண்டு, இம்மாநிலத்தில், குற்றச்செயல்களின் எண்ணிக்கை 10 விழுக்காடு குறைந்துள்ளது. வன்முறை குற்றங்கள் 20 விழுக்காடு குறைந்துள்ளது. சொத்து குறித்த குற்றங்கள் 8 விழுக்காடு குறைந்துள்ளது” என்று அவர் சுட்டிக் காட்டினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker