Latestமலேசியா

சிங்கை-மலேசியா அதிவேக ரயில் ரத்து;  மகாதீரின் முடிவால் அதிருப்தி!

கோலாலம்பூர், மே.30- சிங்கப்பூர்-மலேசிய நாடுகளுக்கு இடையிலான அதிவேக ரயில் திட்டம் ரத்து செய்தது குறித்து, பிரதமர் துன் மகாதீர் முகமட் அமைச்சரவையில் விவாதிக்கவில்லை என்றும், அவர் தாமாகவே  ரத்து செய்ய முடிவெடுத்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சரவை உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்காமல், அவர் அத்திட்டத்தை ரத்து செய்தது தொடர்பில், பல அமைச்சர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

பங்குத்தாரர்கள், மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களுடன் ஆலோசித்த பின்னர், மகாதீர் அந்த அதிவேக ரயில் திட்டம் குறித்து முடிவெடுத்திருக்கலாம் என்று பலர் கருதுவதாக வெளிநாட்டு தூதரக அதிகாரி ஒருவர் மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளார்.

யாருடனும் கலந்தாலோசிக்காமல், மகாதீர் சொந்தமாக முடிவெடுத்து உள்ளதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் தனது சர்வாதிகார ஆட்சியைத் தொடங்கி உள்ளாரா? என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

“அனாவசிய செலவினை ஏற்படுத்தும் திட்டங்களை ரத்து செய்யும் அடிப்படையில் தான், பிரதமர் இந்தத் திட்டத்தை ரத்து செய்திருப்பார் என்று சிலர் ஆறுதல் கூறுகின்றனர். பலரின் மனதில், மகாதீரின் சர்வாதிகாரம் குறித்த கவலை இன்னும் இருக்கின்றது என்பதே உண்மை” என்றார் அவர்.

தனது அமைச்சரவை உறுப்பினர்களிடம் மட்டுமல்லாது, சிங்கப்பூர் தலைவர்கள் யாரிடமும் தனது முடிவு குறித்து மகாதீர் எவ்வித பேச்சு வார்த்தையும் இதுவரை நிகழ்த்தவில்லை. அவரின் அம்முடிவு குறித்து அவர் செய்தியாளர்களின் கூட்டத்தில் தான் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த அதிவேக ரயில் திட்டத்தை மும்மொழிந்து, அதில் ஈடுபட்டுள்ள சீனா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கும் மகாதீரின் முடிவு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

இந்த அதிவேக ரயில் சேவை ரத்து செய்வது குறித்து தங்களுக்கு அதிகாரப் பூர்வ கடிதம் அனுப்பி வைக்கப் படவில்லை என்று சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சு நேற்று தெரிவித்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker