Latestமலேசியா

10% சம்பளம்- ‘தாபோங் ஹராப்பானுக்கு’ -பினாங்கு அரசு முடிவு!

ஜோர்ஜ் டவுன், மே.31- அடுத்த மாதம் தொடங்கி, பினாங்கு மாநில முதலமைச்சர் மற்றும் அம்மாநில செயற்குழு உறுப்பினர்களின் மாதச் சம்பளத்தின் 10 விழுக்காடு, ‘தாபோங் ஹராப்பான்’ என்ற அறக்கட்டளை நிதிக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்று அம்மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாட்டின் கடனை செலுத்த, மக்கள் பங்களிக்க வேண்டும் என்ற பிரதமர் துன் மகாதீர் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, நேற்று நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் தாம் அம்முடிவை எடுத்ததாக பினாங்கு மாநில முதலமைச்சர் சோவ் கோன் இயோவ் கூறினார்.

ஒவ்வொரு மாதமும், ரிம.13,526.80-யை அம்மாநில செயற்குழு தாபோங் ஹராப்பான் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கும் என்று சோவ் தெரிவித்தார். இது எவ்வளவு நாட்களுக்கு தொடரும் என்று தம்மால் இப்போது கூற முடியாது என்றும் அவர் சொன்னார்.

பினாங்கு மாநில முதல்வருக்கு ரிம.14,175.15 மாதச் சம்பளமாக வழங்கப்படுகிறது. அம்மாநிலத்தின் செயற்குழு உறுப்பினர்கள் ரிம.12,101.29 (தலா) மாதச் சம்பளமாக பெறுகிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள், மாதம் ஒன்றுக்கு ரிம.11,250 சம்பளமாக பெறுகிறார்கள்.

“இந்த நன்கொடையானது, மத்திய அரசாங்கத்தின் கடன் தொல்லையை குறைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

கெடா மாநில மந்திரி பெசார் மற்றும் அம்மாநில செயற்குழு உறுப்பினர்களின் சம்பளமும் 10% குறைக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவை உறுப்பினர்களின் சம்பளம் குறைக்கப்படும் என்று பிரதமர் துன் மகாதீர் அண்மையில் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாது, ஜுலை மாதம் 1-ஆம் தேதியிலிருந்து பொதுச் சேவை ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும் என்பது தொடர்பில் மறுபரிசீலனை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker