Latestமலேசியா

அட்டர்னி நியமனம்: துரிதப்படுத்துக! -வழக்கறிஞர் மன்றம்

கோலாலம்பூர், ஜூன்.4- நாட்டின் சட்டத்துறை தலைவராக யாரை பிரதமர் தேர்ந்தெடுக்கிறாரோ, அவரை பேரரசர் உடனடியாக நியமிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.

கடந்த மூன்று வாரங்களாக, அரசாங்க நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்க சட்டத்துறை தலைவர் யாரும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி, அந்த நியமனம் மிக விரைவில் நடைபெற வேண்டும் என்று வழக்கறிஞர் மன்றத் தலைவர் ஜோர்ஜ் வர்க்கீஸ் கூறினார்.

“மூன்று வாரங்களுக்கு முன்னர், சட்டத்துறை ஆலோசகராக பொறுப்பேற்றிருந்த டான்ஶ்ரீ முகமட் அபெண்டி அலி, நீண்ட விடுமுறையில் செல்லுமாறு பணிக்கப் பட்டார்.

அதனைத் தொடர்ந்து, அப்பதவிக்கு தகுதியான சட்டத்துறை தலைவர் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்க வேண்டும். இப்போதே கால தாமதமாகி விட்டது” என்று ஜோர்ஜ் சொன்னார்.

“நாட்டின் அரசியலமைப்பு சட்டம், 145(1)-இன் படி, பிரதமரால் தேர்ந்தெடுக்கப் படும், சட்டத்துறை தலைவரை, பிரதமரின் ஆலோசனையின்படி மாமன்னர் நியமிக்க வேண்டும். மாமன்னரும் அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் உண்டு” என்று அவர் விளக்கினார்.

“இந்த நியமனம் விரைவில் நடைபெற வேண்டும். மேலும் நேர விரயம் கூடாது. மாமன்னர், கூடிய விரைவில் இதன் தொடர்பில் செயல் பட வேண்டும்” என்று ஜோர்ஜ் கேட்டுக் கொண்டார்.

கடந்த மே மாதம் 15-ஆம் தேதியன்று, சட்டத்துறை தலைவர் அபெண்டி அலி, விடுப்பில் செல்ல வேண்டும் என்று பிரதமர் துன் மகாதீர் முகமட் கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, இடைக்கால சட்டத்துறை தலைவராக டத்தோ எங்கூ நோர் பைஃஸா நியமிக்கப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker