Latestமலேசியா

“நான் திரும்பவும் வந்துட்டேன்”-அன்வார்; பிகேஆரின் படை திரள்கிறது!

கோலாலம்பூர், ஜூன்.7- கடந்த மூன்று ஆண்டுகளாக சிறைப்படுத்தப் பட்டு, அண்மையில் விடுதலையாகிய பிகேஆர் கட்சி ஆலோசகர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், பிகேஆர் கட்சியின் 116 முக்கிய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை தனது இல்லத்தில் நேற்று சந்தித்தார்.

அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அன்வார் ஒதுங்கியிருந்த போதிலும், அவரின் ஆலோசனையின் அடிப்படையில் தான் அக்கட்சி உறுப்பினர்கள் செயல் படுகின்றனர் என்பது இதன் வாயிலாக தெளிவாகியுள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு சிறைப்படுத்தப் பட்ட அன்வார், சிறையில் இருந்த போதிலும், தனது கட்சியினர் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்ற உத்தரவுகளும் ஆலோசனைகளும் அவரே வழங்கி வந்தார்.

இப்போது சிறையிலிருந்து வெளியேறிய பின்னர், பிகேஆர் கட்சித் தலைவர் மீண்டும் முழு ஆளுமைமிக்க அரசியலுக்கு வருகிறார் என்பதாகவே அவரது செயல்கள் அமைந்துள்ளன. “நான் திரும்பி வந்துட்டேன்” என்று அவர் நேற்று அந்தக் கட்சி உறுப்பினர்களிடம் கூறியதாக, அந்தச் சந்திப்பில் கலந்துக் கொண்ட ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

பிகேஆர் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் இடையிலான கூட்டணி, நாட்டிற்கும் நாட்டின் நலனுக்கும் மிகவும் முக்கியம் என்பதை சுட்டிக் காட்டி, பிரதமர் துன் மகாதீருக்கு தாங்கள் வழங்கியிருக்கும் ஆதரவு தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் அன்வார் அந்தச் சந்திப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

அன்வாருக்கும் மகாதீருக்கும் இடையில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து, தாங்கள் இருவரும் இப்போது நல்லுறவை கொண்டிருப்பதாகவும் அவர் கட்சி உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.

அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை சந்தித்து வருவது தொடர்பில் பல்வேறான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ள அன்வார், நாட்டில் எவ்வித பிரச்சனைகளும் எழுந்து விடக் கூடாது என்ற அடிப்படையில் தான் அந்தச் சந்திப்பு நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்தார்.

இதனிடையில், பிகேஆர் கட்சியின் ஆண்டுக் கூட்டம் இவ்வாண்டு நடைபெறும் என்ற தகவல்கள் கசிந்துள்ள வேளையில், ரபீஸி ரம்லிக்கு அன்வாரின் ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என்றும், அவருக்கு சில முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என்றும், நேற்று நடைபெற்ற சந்திப்பின் வாயிலாக தெரிய வந்துள்ளதாக மேலும் ஒருவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker