Latestமலேசியா

வறுமை வாட்டினாலும், கல்விக்காக வாடக்கூடாது! -மாலினி சேவை

புக்கிட் பெர்டாஜாம், ஜூன் 8 – கல்வி என்பது விலை மதிக்க முடியாததாக இருக்கலாம்; ஆனால் அது தேவைப்படுபவர்களிடம் சென்றடையாமல் போகுமானால் அது அர்த்தமற்றதாகிவிடும் என்பதால், தாம் செய்து கொண்டிருந்த விரிவுரையாளர் பணியைத் துறந்து விட்டு குழந்தைகளுக்கான கல்விச் சேவையில் இறங்கிவிட்டார் ஜி.மாலினி.

போதுமான கல்வி வசதியைப் பெற முடியாமல் இருக்கும் பிள்ளைகளுக்காக இங்குள்ள புக்கிட் மங்யாக்கில், ஒரு டியுசன் வகுப்பை தொடங்கி, பிள்ளைகள் படிப்பதற்கு ஏதுவான குறைந்த கட்டணத்தில் நடத்தி வருகிறார் அவர்.

2015 ஆம் ஆண்டில் இவர் தொடங்கிய இந்தக் கல்விச் சேவையில் தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் படிவம் வரையிலான 90க்கும் அதிகமானவர்கள் படித்து வருகிறார்கள்.

இவர்களில் மிகவும் வசதி குறைந்த 15 பேருக்கு கட்டணம் எதுவுமில்லை. மற்ற மாணவர்களுக்கு குறைந்த பட்ச கட்டணம் விதிக்கப்படுகிறது.

எனக்கு 9 வயதில் மகனும், 7 வயதில் மகளும் உள்ளனர். அவர்கள் இருவருமே சிறந்த வாழ்க்கை, சிறந்த கல்வி வசதியைப் பெற்றுள்ளனர். அவர்கள் கல்வி வாய்ப்பு எதனையும் இழந்து தவிக்கவில்லை.

ஆனால், இவ்வட்டாரத்தில் வாழும் இதர பிள்ளைகள் பலருக்கு அத்தகைய கல்வி வசதி சரியாக கிடைக்கவில்லை. அவர்களுடைய குடும்பத்தினரின் வாழ்க்கைச் செலவிலான நிலையே இதற்கு காரணம், எனவே அவர்களுக்கு உதவ முயன்றேன். வேலையைத் துறந்து விட்டு, டியுசனைத் தொடங்கினேன் என்கிறார் 40 வயதுடைய மாலினி.

தனித்து வாழும் தாய்மார்கள் மற்றும் வறுமையிலுள்ள குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு கட்டணம் இல்லை. அவர்கள் கல்வியில் சிறந்து தேர்ச்சி பெற உதவுவதே எனது நோக்கம் என்றார் அவர்.

எல்லா பாடங்களும் கற்றுத் தருகிறோம். என்னிடம் பணிபுரியும் ஆசிரியர்கள் கூட குறைந்த சம்பளத்தில் சேவை அடிப்படையில் உதவி வருகிறார்கள் என்று அவர் சொன்னார்.

மேலும் புக்கிட் தெங்காவில் உள்ள மியன்மார் அகதிகளின் குழந்தைகளான 130 பேருக்கு வாரத்திற்கு இருமுறை மலாய்மொழி பாட வகுப்பையும் நடத்தி வருகிறார் மாலினி.

கல்வியைப் பொறுத்தவரை எந்தப் பிள்ளையும் வசதிக் குறைவினால் பின் தங்கி விடக்கூடாது. உதவிக்கரம் மீளுமானால் அவர்களும் உயர்வார்கள் என்கிறார் மாலினி.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker