Latestமலேசியா

ஜி.எஸ்.டி. நீக்கம்: பொருள் விலை குறையுமா, குறையாதா?

கோலாலம்பூர், ஜூன்.11- ஜி.எஸ்.டி எனப்படும் பொருள் சேவை வரி அகற்றப் பட்டதைத் தொடர்ந்து, பொருட்களின் விலை குறையும் என்று மக்கள் அல்லது பயனீட்டாளர்கள் கருதுகின்றனர் என்று நீல்சன் மலேசிய என்ற கருத்து கணிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

பொருட்களின் விலைகள் குறைக்கப் பட்டால், அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் தங்களுக்கு சிரமம் ஏதும் ஏற்படாது என்று பயனீட்டாளர்கள் கருதுவதாக அந்த நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

ஜூன் மாதம் 1-ஆம் தேதி தொடங்கி, நாட்டில் ஜி.எஸ்.டி வசூலிக்கப் படாததைத் தொடர்ந்து, இந்தப் புதிய மாற்றம், நாட்டின் பொருளாதாரத்திற்கு பெருமளவில் உதவியாக அமையும் என்று ஐந்தில் நால்வர் கருத்துரைத்துள்ளனர். இந்தக் கருத்து கணிப்பு 1,000 மலேசியர்களிடம் மேற்கொள்ளப் பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

அவர்களில் 57 விழுக்காட்டினர், ஜி.எஸ்.டி அகற்றப் படுவதன் வாயிலாக, பொருட்களின் விலைகள் குறையும் என்று நம்பிக்கைத் தெரிவித்து உள்ளனர். 33 விழுக்காட்டினர், பொருள் சேவை வரி அகற்றப் பட்ட போதிலும், பொருட்களின் விலைகள் குறையாது என்று கருதுகின்றனர்.

கடந்த 2015-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதியன்று, இந்தப் பொருள் சேவை வரி நாட்டில் அறிமுகப் படுத்தப் பட்டது. அதனைத் தொடர்ந்து, பொருட்களின் விலைகள் ஏற்றம் கண்டன.

இப்போது, அந்தப் பொருள் சேவை வரி அகற்றப் பட்டதால், மீண்டும் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டு, அவற்றின் விலைகள் குறைக்கப் படும் என்று பயனீட்டாளர்கள் கருதுகின்றனர் என்று நீல்சன் மலேசியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரஃபேல் பெரேடா கூறினார்.

ஜி.எஸ்.டி அகற்றப் பட்டதைத் தொடர்ந்து, 69 விழுக்காடு பயனீட்டாளர்கள் பொருட்களை வாங்குவதில் தயக்கம் காட்டுவதில்லை என்று பெரேடா சொன்னார். இது வியாபாரிகளுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் நல்ல செய்தியாக அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையில், பெட்ரோல் விலையை அரசாங்கம் நிலைப்படுத்தி உள்ளதையும், 77 விழுக்காட்டினர் பெருமளவில் வரவேற்றுள்ளனர் என்று அவர் கூறினார். புதிய அரசாங்கத்தின் மாற்றங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker