Latestமலேசியா

போலீஸ் இலாகாவில் பூகம்பம்; ஐஜிபி உள்பட பலருக்கு  சரிவு

கோலாலம்பூர், ஜூன்.11 – மலேசியா போலீஸ் படைத்தலைவர் டான்ஶ்ரீ முகம்மட் புஸி ஹருண் உள்பட பல முக்கிய தலைமைப் போலீஸ் அதிகாரிகளை அடுத்த மாதத்தில் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் மாற்றப் போகிறது.

போலீஸ் படையை ‘சுத்திகரிக்கும்’ முயற்சியாக அரசாங்கம் இவ்வாறு செய்யவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஊழல்கள் மலிந்து விட்டதாக கருதப்படும் மூன்று போலீஸ் துறைகள் முற்றாக கலைக்கப்படும். பல முக்கிய அதிகாரிகள் சிலர் நீக்கப்படுவர் என்று ஆங்கில தினசரியான தி ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

போலீஸ் துறையில் ஒரு பூகம்பம் நிகழப்போகிறது. இந்தப் பூகம்பம் 8 புள்ளி 5 ரிக்டர் அளவில் மோசமனதாக இருக்கும் என்று போலீஸ் வட்டாரங்கள் கூறியதாக அந்தத் தினசரி வர்ணித்தது.

யார் முதலில் அகற்றப்படுவார்கள் என்ற கேள்விக்கு ‘நெம்பர் – 1’ தான் முதலில் அகற்றப்படுவார் என்று ஐ.ஜி.பி.யை அந்தத் தகவல் சுட்டிக்காட்டியுள்ளது.

டான்ஶ்ரீ காலிட் அபு பக்காருக்குப் பதிலாக கடந்த 9 மாதங்களுக்கு முன்புதான் டான்ஶ்ரீ புஸி ஹருணை முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று போலீஸ் துறைகளுக்கு மூடு விழா நடக்கவிருக்கிறது. விபசார ஒழிப்பு, சூதாட்டம் மற்றும் குண்டர் கும்பல் ஆகியவற்றுக்கான சிறப்புப் படைப் பிரிவு, அமைப்பு ரீதியான குற்றச் செயல் ஒழிப்பு சிறப்புப் படை மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு சிறப்பு உளவுப் பிரிவு ஆகியவையே அந்த மூன்று இலாகாக்கள் என்று தெரிய வருகிறது.

இந்த மூன்று இலாகாக்களும் கலைக்கப்படுவதற்கான காரணம், இந்த இலாகாக்கள், குற்றச் செயல்களை ஒழிப்பதற்குப் பதிலாக ஊழலிலும், அத்தகைய குற்றவாளிகளைப் பாதுகாப்பதிலும் ஈடுபட்டதாகக் கருதப்படுகின்றன என்று தகவல்கள் தெரிவித்தன.

மேலும் இந்தப் பிரிவுகளில் பணிபுரியும் பல அதிகாரிகள், குண்டர் கும்பல்களை ஒழிக்கும் பணியை ஏற்றிருந்தனர். ஆனால் இவர்கள், அத்தகைய குண்டர் கும்பல்களைப் பாதுகாப்பதிலும் ஈடுபட்டனர் என்பது தெரிய வந்திருப்பதாக கூறப்பட்டது.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker