Latestமலேசியா

“விரும்பப் படாத நிதியமைச்சரா நான்? பரவாயில்லை” – லிம்

கோலாலம்பூர், ஜூன்.11– ‘மக்களால் நான் விடும்பப்படாத ஒரு நிதியமைச்சராக ஆகலாம். அப்படி ஆனாலும் பரவாயில்லை. அதற்காக வருத்தப்பட மாட்டேன்’ என்று லிம் குவான் எங் கூறினார்.

ஒரு வங்கியில் மூத்த நிர்வாகியாக பணிபுரிந்து, பிறகு நாடாளுமன்ற உறுப்பினராகி, பின்னர் பினாங்கின் முதல்வராக பொறுப்பேற்று, இப்போது கூட்டரசு அரசாங்கத்தில் நிதியமைச்சராக ஆகியிருக்கிறார் தோழர் லிம் குவான் எங்.

லிம்மின் அரசியல் போராட்டம் என்பது மிகவும் வியப்பூட்டக்கூடிய ஒரு பந்தயம் என்று சொன்னால் மிகையில்லை. பத்து ஆண்டுகள் பினாங்கு மாநில அரசாங்கத்தை சிறப்பாக வழிநடத்திய பின்னர், சவால்கள் நிறைந்த சூழ்நிலையில், நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளார் அவர்.

பினாங்கின் சொத்துக் கையிருப்பை இரட்டிப்பாக்கி 1,830 கோடி ரிங்கிட்டை எட்ட வைத்தவர் லிம். அதன் கடனை 65 மில்லியன் ரிங்கிட்டாக குறைத்துக் காட்டியவர். நிதி நிர்வாகத்தில் சிறந்த மாநிலம் என ஆடிட்டர் ஜெனரலால் பினாங்கு சுட்டிக்காட்டப்படும் நிலைக்கு உயர்த்தியவர் அவர்.

இத்தனை சாதனைகளோடு கூட்டரசு அரசாங்கத்தில் நிதியமைச்சராக அவர் பதவியேற்று போது நாட்டின் கடன் என்பது 1 டிரில்லியன் ரிங்கிட்டை தொட்டு விட்டது.

இந்தக் கடனைச் சமாளிக்க எல்லா செலவினங்களையும் கட்டுப்படுத்தி, குறைக்க வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறார் லிம்.

‘நான் செலவினங்களின் மீது கை வைத்தால், நிச்சயமாக பலராலும் விரும்பப்படாத ஒரு நிதியமைச்சராக ஆகிவிடுவேன். அப்படித் தான் வரலாறு சொல்லப்போகிறது. இப்போது எங்களிடம் பணம் இல்லை. எல்லாச் செலவுகளையும் குறைத்துத்தான் ஆக வேண்டும் என்று 57 வயதுடைய லிம் பெர்னாமாவுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

“வரலாற்றில், நான் விருப்பப்படாத நிதியமைச்சராக
இடம்பெற நேர்ந்தாலும் பரவாயில்லை. செலவுகளைக் குறைப்பேன். எல்லாவற்றையும் துடைத்து எடுப்பேன். இந்நாட்டை மாற்றிக் காட்டுவேன், நாளைய நமது குழந்தைகளுக்கு உகந்ததாக நாடு அமையட்டும்” என்றார் அவர்.

இந்நிலையை எட்டுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு தெரியும் என நம்பிக்கையோடு கூறினார் லிம்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker