Latestமலேசியா

புதிய அமைச்சரவை: யார் யாருக்கு, என்னென்ன பதவிகள்?

கிள்ளான், ஜூன்.12- பக்காத்தான் அரசின் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பிரதமர் துன் மகாதீர் அறிவிக்கவுள்ளார். இந்நிலையில், யாரெல்லாம் அமைச்சரவையில் இடம்பெறவுள்ளனர், யாருக்கு என்ன பதவி? என்பது தொடர்பாக உறுதிப்படுத்தப்படாத சில தகவலகள் வெளிவந்துள்ளன.

ஜசெக சார்பில் ஏற்கெனவே நான்கு அமைச்சர்கள் உள்ளனர். எனினும், குறைந்தது மேலும் மூன்று அமைச்சு பதவிகள் அந்த கட்சிக்கு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக், தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஙா கோர் மிங், ஜசெக தலைவர் தான் கோக் வாய் ஆகியோர் அதில் அடங்குவர் என கூறுகிறார்கள். திரேசா கோக்கிற்கு சுற்றுலா அமைச்சு வழங்கப்படலாம் என ஏற்கெனவே சொல்லப்பட்டது. இந்நிலையில், தான் கோக் வாய், அமைச்சராகும் ஆசை எல்லாம் தனக்கில்லை என்று கூறி இருக்கிறார்.

சிலாங்கூர் சட்டமன்றத்தில், ஐந்தாண்டுகளாக சபாநாயகராக இருந்த அனுபவம் பெற்ற சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா யோ சபா நாயகர் அல்லது துணை சபாநாயகர் பதவி வழங்கப்படலாம்.

இதற்கிடையே, 28 பேர் அடங்கிய அமைச்சரவையில் பி.கே.ஆரைச் சேர்ந்த தலைவர்கள் அதிகமானோர் இருக்கலாம் என ஆருடங்கள் வெளியாகியுள்ளன.
தேர்தலில் தியான் சுவா போட்டி இட்டிருந்தால், அவர் நிச்சயம் அமைச்சராகி இருப்பார்.

அவருக்கு பதிலாக செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங், வங்சா மாஜு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தின் படுக்கா டான் யீ கியூ ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாம்.

கோலா லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமாருக்கு “நமது துன் சாமிவேலு” வெகு காலமாக வகித்திருந்த பொதுப்பணி அமைச்சும், இந்திரா மாக்கோத்தா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சைபூடின் அப்துல்லாவுக்கு வெளியுறவு அமைச்சும் வழங்கபடலாம் என்று பரபரப்பாகப் பேசப்படுகிறது.

அமானா கட்சி சார்பில் ஷா ஆலாம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சாமாட் அமைச்சரவையில் அங்கம் வகிக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ள வேளையில், பிரிபூமியின் இளைஞர் அணித் தலைவர் ஷேட் சட்டிக், இளைஞர், விளையாட்டு அமைச்சராகலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வாரத்திற்குள் துன் மகாதீர் அமைச்சரவை விரிவாக்க பட்டியலை அறிவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker