Latestவிளையாட்டு

உலகக் கிண்ண கால்பந்து: அதிரடி, நாளை ஆரம்பம்!

மாஸ்கோ, ஜூன் 13 – ஆரம்பமாகிறது அதிரடி. உலகின் கண்கள் ஒருமித்த வகையில் ரஷ்யாவின் பக்கம் திரும்பியுள்ளது. உலகக் கிண்ண கால்பந்து போட்டி, நாளை வியாழக்கிழமை கோலாகலமான விழாவுடன் தொடங்குகிறது. ஜூன் 14 ஆம் தேதி தொடங்கி ஜூலை 15 ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் இந்தப் போட்டி ஓர் உலகத் திருவிழாவாக விளங்கப் போகிறது.

அதிர வைக்கும் ஆட்டங்கள், உற்சாகம், சோகம், கோபம், கொந்தளிப்பு, வேகம், விரக்தி என அத்தனை வகையான உணர்வுகளும் ஒருங்கே வெளிப்பட, 32 நாடுகள், மொத்தம் 736 உலக மகா கால்பந்து வீரர்கள் களமிறங்குகின்றனர். பெரும்பாலான ஆட்டங்கள் மலேசிய நேரப்படி இரவு 8.00 மணி, 11.00 மணி மற்றும் அதிகாலை 2.00 மணி அளவில் இடம் பெறுகின்றன.

நூற்று ஐம்பத்துக்கும் அதிகமான நாடுகளுக்கு நேரடி ஒளிபரப்பாக அமையவிருக்கும் நாளைய தொடக்க விழவுடன், முதல் ஆட்டத்தில், போட்டியை ஏற்று நடத்தும் நாடான நஷ்யா, ஆசியாவின் முன்னணி குழுக்களில் ஒன்றான சவுதி அரேபியாவுடன் மோதவிருக்கிறது.

போட்டியை நடத்தும் நாடு என்பதால், உள்நாட்டு மக்களின் ஆவேசமான எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே ரஷ்யா களமிறங்குகிறது. எனவே, அது தன்னை விட பலம் குறைந்த சவூதி அரேபியாவை வீழ்த்தி, முதல் வெற்றியைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

உலகின் கால்பந்து கடவுள்களாக ரசிகர்களால் போற்றப்படும், லியோனல் மெஸ்சி, நெய்மார் ஜுனியர், கிறிஸ்தியானோ ரொனால்டோ ஆகியோர் மீண்டும் தங்களது ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்வர்.

மேலும், இந்த உலகக் கிண்ணப் போட்டியின் முடிவில், புதிய கால்பந்து நாயகர்கள் பலர் உலக அளவில் புகழ் பெறவிருக்கின்றனர்.2018 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தை வெல்லக் கூடிய குழுக்கள் என்று சில குழுக்கலை சுட்டிக்காட்டி கால்பந்து நிபுணர்கள் பல்வேறு ஆருடங்களை கூறியுள்ளனர்.

எனினும், பெரும்பாலான ஆருடங்கள், பிரேசில், ஜெர்மனி, ஸ்பெயின் அர்ஜெண்டினா மற்றும் பிரான்ஸ் என்ற வரிசையிலேயே அமைந்துள்ளன. இந்தப் போட்டியில் அதிக கோல்களை அடித்த ஆட்டக்காரராக யார் உருவெடுப்பார்கள் என்பது குறித்தும் ஆருடங்கள் கூறப்பட்டுள்ளன.

உலகின் தலை சிறந்த ஆட்டக்காரரான பிரேசிலின் நெய்மார், அந்தப் பெருமையை பெறுவார் என்று கூறப்பட்டது. எனினும், ரோமெலு லுக்காகோ (பெல்ஜியம்) ரோபெர்த்தோ பிர்மினோ (பிரேசில்) கேப்ரியல் ஜிசஸ் (பிரேசில்) கிறிஸ்மான் (பிரான்ஸ்) லூய்ஸ் சுவரெஸ் (உருகுவே) ஆகியோர் இந்த ஆருடத்தில் இடம் பெற்றுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker