Latestமலேசியா

மலேசியர்களை கொல்லும் மன அழுத்தம்:: சுகாதார அமைச்சு கவனிக்குமா?

கோலாலம்பூர், ஜூன்.13- மலேசியர்கள் பலரை தாக்கி வரும் மன அழுத்தத்திற்கு சுகாதார அமைச்சர் டாக்டர் ஜூல்கிப்ளி அகமட் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று நிபுணர்கள் பலர் அறிவுறுத்தியுள்ளனர்.

பொதுத் துறையில் கைத்தேர்ந்த மனநல மருத்துவர்கள் நியமிக்கப் பட வேண்டும். மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப் பட வேண்டும். மனநலம் மற்றும் மன அழுத்தம் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அந்த நிபுணர்கள் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.

கடந்த வாரத்தில், அமெரிக்காவின் பிரபலங்கள் இருவர், தற்கொலைச் செய்துக் கொண்டதை சுட்டிக் காட்டி, மன அழுத்தம் மற்றும் மன நலம் குறித்து பலருக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை என்று மலேசிய மருத்துவ சுகாதார சங்கத் தலைவரான டாக்டர் அண்ட்ரூ மோகன்ராஜ் கூறினார்.

வேலை இடங்களில் பலர் மன அழுத்தத்தால் பாதிக்கப் படுகின்றனர் என்றும், 2030-ஆம் ஆண்டிற்குள், இருதய நோயால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கையை காட்டிலும், மன அழுத்தத்தால் பாதிக்கப் படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற தகவலையும் அண்ட்ரூ பகிர்ந்துக் கொண்டார்.

“இது மிகவும் அபாயகரமான சூழ்நிலையாகும். மன அழுத்தத்திற்கு ஆளாகுபவரின் வேலை ஆண்டுகள் பாதிப்படைவது மட்டுமல்லாமல், அவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் மன அழுத்தத்தால் பாதிக்கப் படுகிறது. சிலர் தங்களின் உயிர்களையும் மாய்த்துக் கொள்கின்றனர். தேவையான உதவியை நாடாமல், பலர் தற்கொலை செய்துக் கொள்கின்றனர்” என்று அவர் சொன்னார்.

மூன்று மலேசியர்கள் ஒருவர் மனநல பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றார் என்று 2015-ஆம் ஆண்டின் தேசிய நோய்பாதிப்பு நிலை ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்த எண்ணிக்கை 29.9 விழுக்காடாக பதிவாகியுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர், இந்த எண்ணிக்கை 10.7 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது.

மன அழுத்தம் தான் மனநல பிரச்சனைகளில் மிகவும் ஆபத்தானது என்று அண்ட்ரூ மோகன்ராஜ் தெரிவித்தார். இதனிடையில், வேலை இடங்களில், தொழிலாளர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப் படாத வகையில் சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட வேண்டும் என்று மருத்துவ உளவியலாளர் டாக்டர் ஜோயல் லோ கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker