Latestமலேசியா

ஆணாதிக்க அரசியல் களத்தில் தடைகளை உடைத்தவர் வான் அஸிசா!

கோலாலம்பூர், ஜூன்.14-  ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த அரசியலில், முட்டுக்கட்டைகள் பலவற்றை தகர்த்தெறிந்து, ஆட்சியில் அமர்ந்த அசாத்திய அரசியல் பெண் ஆளுமைதான் டாக்டர் வான் அஸிசா.

மலேசிய வரலாற்றில், கடந்த பொதுத் தேர்தல் வரை எந்தப் பெண்ணும் பிரதமர் அந்தஸ்திற்கு  உயர்ந்தது இல்லையோ அதுபோல 1999-ஆம் ஆண்டு வரை எந்தப் பெண்ணும் ஒரு கட்சிக்குத் தலைவராகவும் இருந்ததில்லை.

அதிலும் ஓர் எதிர்க்கட்சிக்கு ஒரு பெண் தலைவராக இருப்பது அவ்வளவு சாதாரணமல்ல. தனது கணவர் துணைப் பிரதமராக இருந்தபோது இருக்கும் இடமே தெரியாமல் இருந்தவர்தான்  நம் துணைப் பிரதமர் வான் அஸிசா. அப்படி இருந்தவர்தான், தே.மு அரசாங்கமே அரசாங்கத்தையே ஆட்டம் காண வைத்தார் என்றால் மிகையில்லை.

கண் மருத்துவராகவும், ஆறு பிள்ளைகளுக்கு தாயாகவும் மட்டுமே இருந்து வந்த வான் அஸிசா, 1998-இல் தனது கணவர் கைதான பிறகு அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். 1999-இல்  கெஅடிலான் கட்சியை அமைத்து, அக்கட்சியின்  தலைவர் பொறுப்பை ஏற்றார்.

இப்படி கடந்த 20 ஆண்டுகளாக பல சவால்களுக்கு இடையில் தனது பொறுப்புகளை செவ்வனே செய்து வந்தபோதிலும், தற்போது தான் ஏற்றிருக்கும் துணைப்பிரதமர் பொறுப்பும், மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் பொறுப்பும் தனக்கு சற்று தடுமாற்றத்தை தந்திருப்பதாக வான் அஸிசா கூறியுள்ளார்.

இந்த பொறுப்புகளை குறைவின்றி செய்ய தான் மேலும் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது என்கிறார், ஒன்பது பேரக்குழந்தைகளுக்கு பாட்டியான 66 வயது வான் அஸிசா.

“எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆளும் கட்சியாக இருந்த தே.மு-வை அதிகமாக விமர்த்திருக்கிறோம். இப்போது  ஆளுங்கட்சியாக செயல்படும் வேளையில், எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு பக்காத்தான் ஆளாகக் கூடாது.

ஓர் எதிர்க்கட்சி  முதல் முறையாக ஆட்சியைப் பிடித்திருப்பதால் எல்லாமே புதிதாகத்தான் இருக்கிறது. இயல்பாகச் செயல்பட கொஞ்ச நாள் ஆகலாம். ஆனால், மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்கும் கொள்கையில் இருந்து சற்றும் விலக மாட்டோம்” என வான் அஸிசா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker