Latestமலேசியா

ஆஸி. வங்கியில் சிஐடி தலைவரின் ரிம. 970,000: –எம்.ஏ.சி.சி விசாரணை!

கோலாலம்பூர், ஜூன்.14- புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஶ்ரீ வான் அகமட் நஜ்முடினுக்குச் சொந்தமான ஆஸ்திரேலிய வங்கிக் கணக்கில் ரிம.970,000 பணப் பரிமாற்றம் செய்யப் பட்டது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

அவ்விவகாரம் தொடர்பிலான ஆவணங்களை கைப்பற்றும் பொருட்டு, ஆஸ்திரேலிய போலீஸ் படையின் உதவியை எம்.ஏ.சி.சி நாடி உள்ள வேளையில், அதன் தொடர்பில் ஆஸ்திரேலிய போலீஸ் படை இதுவரை பதிலளிக்கவில்லை என்று எம்.ஏ.சி.சி வட்டாரம் கூறியுள்ளது.

“அச்சம்பவம் குறித்து ஆஸ்திரேலியாவில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதனால், விசாரணை அதிகாரிகள், ஆவணங்களை பெறுவதற்காக, ஆஸ்திரேலிய போலீஸ் படையின் அனுமதிக்கு காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த ஆவணங்களை, எம்.ஏ.சி.சியுடன் ஆஸ்திரேலியா பகிர்ந்துக் கொள்ளவில்லை” என்று அந்த வட்டாரம் கூறியது.

அவ்விவகாரம் தொடர்பில் எவ்வித ஆதாரமும் இல்லாமல், குறிப்பாக அந்த ஆவணங்கள் இல்லாமல், மத்திய புலனாய்வுத் துறை இயக்குநரிடம் விசாரணை மேற்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வங்கி கணக்கில் குறிப்பிட்ட பண பரிமாற்றம் கடந்த 2016-ஆம் தேதி நிகழ்த்தப் பட்டதாக தகவல் அறிந்த அடுத்த நிமிடமே, நேர்மை மற்றும் தரநிலை இணக்கத் துறை அது குறித்து உள் விசாரணை மேற்கொண்டதாக கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதியன்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் புஷி ஹரூண் கூறினார்.

அந்தப் பண பரிமாற்றம், சட்டப்பூர்வ நோக்கத்தின் அடிப்படையில் தான் நிகழ்த்தப் பட்டதாகவும், அதற்கான ஆதாரங்களும் கிடைக்கப் பெற்றதாக ஃபூஸி கூறினார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியாவில் படிக்கும் தன் மகனுக்கு தேவையான பணத்தை பரிமாற்றம் செய்வதற்காக வான் அகமட் நஜ்முடின் அந்த வங்கிக் கணக்கை திறந்துள்ளார். அதன் பின்னர், மீண்டும் 2016-ஆம் ஆண்டு, அந்த வங்கிக் கணக்கில், அந்தத் தொகை பரிமாற்றம் செய்யப் பட்டது. அது அவரின் மகளின் படிப்புச் செலவிற்கான தொகை என்று புஷி தெரிவித்தார்.

ஷா ஆலாமிலுள்ள தனது வீட்டை விற்பனை செய்து, அதன் வாயிலாக கிடைக்கப் பெற்ற ரிம.700,000 தொகையை, வான் அகமட் அந்த வங்கிக் கணக்கில் வைத்திருந்தார் என்று அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker