
கோலாலம்பூர், ஜூன்.16- குவாங் மூசா எம்.பி.யும் அம்னோவின் மூத்த தலைவருமான 81 வயதுடைய துங்கு ரசாலி ஹம்சா, அம்னோ தேசியத் தலைவர் பதவிக்கு டத்தோஶ்ரீ ஸாஹிட் ஹமிடியை எதிர்த்துப் போட்டியிடப் போகிறார்..
இன்று தம்முடைய இல்லத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். தற்போதைய கட்சியின் நிலையைக் கருதி, குறிப்பாக அம்னோ தலைமைத்துவத்தின் நிலையைக் கருதி தாம் இந்த முடிவை எடுத்திருப்பதக அவர் கூறினார்.
”நீண்ட ஆலோசனைக்கு பிறகு அம்னோ தலைமைக்கு போட்டியிட நான் முடிவு செய்துள்ளேன்” என்றார் அவர். அண்மைய பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி அரசாங்கம் தோல்வி கண்டதைத் தொடர்ந்து, அம்னோ தலைவர் பதவியை டத்தோஶ்ரீ நஜிப் ராஜினாமா செய்தார்.
தற்போது கட்சியின் இடைக்கால தலைவராக முன்னாள் துணைப் பிரதமரும் கட்சியின் முன்னாள் துணைத் தலைவருமான ஸாஹிட் பொறுப்பு வகித்து வருகிறார். தலைவர் பதவிக்கு தாம் போட்டியிடப் போவதாக ஸாஹிட் ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.