Latestசினிமா

இன்றிரவு ஆஸ்ட்ரோ வானவில்லில் “மயில் பாலம்’ -மலேசிய திரைப்படம்! (VIDEO)

கோலாலம்பூர், ஜூன் 17  – உள்நாட்டுத் திரைப்படங்களின் வரிசையில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ‘மயில் பாலம்’ மலேசியத் திரைப்படம் இன்றிரவு (ஜூன் 17 ஞாயிறு) 8.30 மணியளவில் ஆஸ்ட்ரோ வானவில், அலைவரிசை 201 ஒளியேறுகிறது.

தமிழ்த் திரையுலகின் தலைச்சிறந்த நடிகரான நாசரின் நேரடிக் கண்காணிப்பில் ‘மயில் பாலம்’ உருவாக்கப்பட்டது. நாசர் நடத்திய நடிப்புத்திறன் பயிற்சியில் கலந்து கொண்டு நடிப்புக் கலையின் பல்வேறு நுட்பங்களை கற்றுக் கொண்ட மலேசியக் கலைஞர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ஆஸ்ட்ரோவில் இடம்பெற்ற ஓரங்க நாடகம் எனும் மேடை நாடகப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் பலர் ‘மயில் பாலம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நாடகக் கலையின் பரிணாமம் தான் திரைப்படம் என்ற அடிப்படையில் நாடகங்களில் நடித்த மாணவர்களை, மாறுபட்ட இன்னொரு களத்தில் கொண்டு நிறுத்துவதில் ‘மயில் பாலம்’ மிகச் சிறந்த வெற்றியை எட்டியுள்ளது.

மாணவர்கள், வளர்ந்து வரும் நடிகர்கள், ஏற்கெனவே திரையுலகில் முத்திரை பதித்த நடிகர்கள் என முத்தரப்பினரின் ஒன்றுபட்ட திறனை இந்தப் படம் வெளிக் கொணர்ந்துள்ளது. படத்தின் திரைக்கதை வசனத்தை, எழுதி படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் திரு.ஏஜி.

கதாநாயகனாக, ஓரங்க நாடகங்களில் பங்கேற்ற மாணவர் தினகரன் இராமசாமி, கதா நாயகியாக குமாரி புவனேஸ்வரி, முக்கிய வில்லனாக விகடகவி மகேன், குபேந்திரன் மகாதேவன், மோகனராஜ் இராமசாமி, முருகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஓரங்க நாடகம் மூலம் நடிப்பு உலகுக்கு அறிமுகமான இளம் நடிகர் நகுலன் பாலு இப்படத்தில் முத்திரை பதித்திருக்கிறார். எனினும், துரதிஷ்டவசமாக அண்மையில் நீர்வீழ்ச்சி ஒன்றில் நிகழ்ந்த விபத்தில் இளம் கலைஞர் நகுலன் உயிர் நீத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய இளைஞர்கள் இடையே நிலவும் சமூக பிரச்னைகளை ஊடுருவில் பார்க்கும் ஓர் உண்மைச் சம்பவத்தை கதை களமாக அமைந்த ‘மயில் பாலம்’ உள்நாட்டு திரைப்பட வரிசையில் அழுத்தமான சுவடை பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker