Latestமலேசியா

‘மஸ்ஜிட் இந்தியா’வில் பஸார் ரமலான்: குண்டர் கும்பல் ஆதிக்கம்!

கோலாலம்பூர், ஜூன்.17- ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் திறக்கப்படும் பஸார் ரமலான், குண்டர் கும்பல் ஒன்றின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக இருப்பதாக உள்நாட்டு வியாபாரிகள் சாடியுள்ளனர். இதன் தொடர்பில், அமலாக்கத் தரப்பினர் சம்பந்தப்பட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

“அங்கு குண்டர் கும்பல் செயல்படுகிறது. யாராவது அந்த கும்பல் குறித்து புகார் அளித்தால், அவர்கள் கதி அதோ கதிதான்” என்கிறார் மஸ்ஜிட் இந்தியா வர்த்தகர் சங்கத் தலைவர் அமீர் அலி மைடின்.

“இதற்கு நடவடிக்கை எடுக்கப்படவே இல்லை. எல்லோரும் ஹீரோ ஆகப் பார்க்கிறார்கள். ஆனால், பிரச்சனை என்று வரும்போது எட்டிப் பார்க்க மாட்டுகிறார்கள். அப்படியானால், தே.மு.வுக்கும் பக்காத்தானுக்கும் என்ன வித்தியாசம்? எல்லோருமே இந்த விவகாரத்தில் இருந்து நழுவப் பார்க்கிறார்கள்” என அமீர் வியாபாரிகள் சார்பில் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

பெர்சத்து இளைஞர் அணி உறுப்பினர் நோர் ஹிஷாம் அப்துல் கரீம் என்பவர் தனது அரசியல் செல்வாக்கை வைத்தது கோலாலம்பூர் மாநகர் மன்ற இடத்தில் 80 கடைகளை அமைப்பதற்கு அனுமதி பெற்றிருக்கிறார். 80 கடைகளையும் 6,000 ரிங்கிட்டுக்கு வாங்கிய நோர் ஹிஷாம், ஒரு கடையை தலா 5,000 ரிங்கிட்டுக்கு வியாபாரிகளுக்கு விற்றிருக்கிறார். ஆனால், அவர் அதனை மறுத்து வருகிறார்.

இந்த பிரச்சனை புக்கிட் பிந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் போங் குய் லூனின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது. ஆனால், உண்மை நிலவரம் அறிய அவர் இங்கு நேரில் வந்து பார்க்க வேண்டுமென அமீர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராகட்டும் அல்லது எந்தக் கட்சிக்ச் சார்ந்தவராகவே இருக்கட்டும், இந்த பஸார் ரமலான் இடத்தை நிர்வகிக்கும் கோலாலம்பூர் மாநகர் மன்றம் அல்லவா இதையெல்லாம் கண்காணித்திருக்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker