Latestமலேசியா

சொந்தக் கட்சியினரே, அம்னோவுக்கு ஓட்டுப் போடவில்லையா? –கிட் சியாங்

கோலாலம்பூர், ஜூன். 18- அம்னோ கட்சி விவகாரங்களில் ஜசெகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான லிம் கிட் சியாங் தலையிடுகிறார் என்று அம்னோ சாடியுள்ள வேளையில், கடந்த பொதுத் தேர்தலில், அம்னோ கட்சியில் இருக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கையை விட, அக்கட்சிக்கு குறைவான வாக்குகளே கிடைத்துள்ளதாக லிம் கிட் சியாங் கூறினார்.

அம்னோ உள்விவகாரங்களில் கிட் சியாங் தலையிடுகிறார் என்று அக்கட்சியின் தகவல் தொடார்புத் தலைவர் அன்னுவார் மூசா கூறியிருப்பது நகைக்கத் தக்க விஷயமாகும். கடந்த பொதுத் தேர்தலில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்த தலைவர்களும், இவ்வாறான ‘மயக்கத்தில்’ தான் இருந்தனர் என்று கிட் சியாங் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த மாய மமதையில் திளைத்திருக்கும் அம்னோ தலைவர்கள் தான், அக்கட்சி தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் என்று அவர் சொன்னார்.

“அம்னோ கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 3.5 மில்லியன் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த பொதுத் தேர்தலில், அக்கட்சிக்கு 2.5 மில்லியன் வாக்காளர்கள் தான் வாக்களித்தனர்.

“மசீசவைப் போன்றே, அம்னோவிற்கும் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட, கிடைக்கப் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை குறைவாக அமைந்துள்ளது” என்று கிட் சியாங் சுட்டிக்காட்டினார்.

“உங்களின் (லிம் கிட் சியாங்) வாயை மூடிக் கொண்டு இருங்கள்.. எங்கள் கட்சி விவகாரங்களில் நீங்கள் தலையிடக் கூடாது” என்று நேற்று அனுவார் செய்தியாளர்களிடம் கூறினார்.

அம்னோவின் முன்னாள் தலைவர் டத்தோஶ்ரீ நஜிப்பின் நிதி முறைக்கேடு விவகாரங்களை எதிர்த்து, அம்னோ தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நாட்டில் தேவையில்லாத இன பேத வாதங்களுக்கு அவர்கள் துணைப் போகக் கூடாது என்று லிம் கிட் சியாங் அண்மையில் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, அனுவார் அவ்வாறு பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker