Latestஉலகம்

பாசத்துக்கு ஓர் அளவே இல்லையா?

புர்கினா ஃபாஸோ, ஜூன்.19- பிணம் தின்னும் முதலைகளை கண்டால் அலறி அடித்துக் கொண்டு ஓடும் மக்களைத்தான் நாம் இதுவரை கண்டுள்ளோம். ஆனால், புர்கினா ஃபாஸோ நாட்டில் உள்ள போஸோல் என்ற ஒரு சிறிய கிராமத்து மக்கள், முதலைகளை வரவேற்று, அவற்றுடன் ஒன்று கூடி வாழ்ந்து வருகின்றனர்.

ஆறு மற்றும் குளங்களில் வசிக்கும் முதலைகளுடன் அக்கிராம மக்கள் நட்பு பாராட்டி வருகின்றனர். “நாங்கள் இளையவர்களாக இருந்த காலம் தொடங்கி, இந்த முதலைகள் இங்கு வசித்து வருகின்றன. இந்த ஆற்றில் நாங்கள் நீச்சல் பயிலும் வேளையில், அதில் முதலைகளும் நீந்திக் கொண்டிருந்தன” என்று அக்கிராமத்தைச் சேர்ந்த பியர்ரே கபோரே கூறினார்.

“இப்போது நாங்கள் இந்த முதலைகளிடம் நட்பாக பழக கற்றுக் கொண்டோம். அவற்றின் மீது நாங்கள் ஏறி அமரலாம். தைரியம் இருந்தால், அவற்றின் மீது படுத்துக் கொள்ளலாம். அவை புனித முதலைகள். எங்களை ஏதும் செய்யாது. எங்களுக்கு மிகவும் பரிட்சயம் ஆனவை” என்று அவர் சொன்னார்.

கடந்த 15-ஆம் நூற்றாண்டு தொடங்கி, முதலைகளுடன் அந்தக் கிராம மக்கள் நட்புறவு வைத்துக் கொண்டுள்ளனர் என்று அந்தக் கிராமத்தின் மூத்தவர் ஒருவர் தகவல் கூறினார்.

அக்காலக் கட்டத்தில் அக்கிராமத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டதாகவும், தண்ணீர் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு, மறைவாக இருந்த அந்த ஆற்றில் நீர் இருப்பதை அந்த முதலைகள் தான் காண்பித்ததாக, அந்த முதியவர் தெரிவித்தார்.

அந்த முதலைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அக்கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும், ‘கூம் லாக்ரே’ என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, முதலைகளுக்கு பிடித்த உணவுகளை வழங்கி, தங்களின் நல்வாழ்விற்கான ஆசியையும் பெற்றுக் கொள்கின்றனர்.

அந்தக் கிராமத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்றால், அந்த முதலைகள் கத்தி ஆர்பாட்டம் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த முதலைகளில் ஏதேனும் இறந்து விட்டால், அவற்றிக்கு முறையான கரும காரியங்களை அந்தக் கிராம மக்கள் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker