Latestமலேசியா

சபாநாயகர் யார்? ராய்ஸா? ஹன்னாவா? பக்காத்தானுக்குள் இழுபறி

கோலாலம்பூர், ஜூன்.22- மக்களவைத் தலைவராக யார் நியமிக்கப் பட வேண்டும் என்பது தொடர்பில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தலைவர்கள் மத்தியில் வாக்கு வாதம் நிகழ்ந்து வருவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத்தின் அவைத் தலைவர் பதவிக்கு டான்ஶ்ரீ டாக்டர் ராயீஸ் யாத்திம் தான் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதனை இதர தலைவர்கள் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளவில்லை என்று கட்சி வட்டாரம் கூறியது.

பக்காத்தான் கூட்டணியின் இதர தலைவர்கள், சிகாம்பூட் நாடாளுமன்ற உறுப்பினரான ஹான்னா இயோதான் மக்களவைத் தலைவராக நியமிக்கப் பட வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது.

ஹான்னா இயோ அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டால், நாட்டின் முதலாவது பெண் மக்களவைத் தலைவராக அவர் திகழ்வார். சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் அவைத் தலைவராக ஹன்னா இயோ செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

“அனுபவம் கொண்டுள்ள ராயீஸ் யாத்தீம் தான் அந்தப் பதவிக்கு சிறப்பானவர் என்று மகாதீர் கருதுகிறார். ஆனால், மற்ற தலைவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் தான் அந்தப் பதவிக்கான நியமனம் இதுவரை அறிவிக்கப் படவில்லை” என்று அக்கட்சி வட்டாரம் தெரிவித்தது.

“மகாதீரால் தேர்ந்தெடுக்கப் படும் ராயீஸ் யாத்தீமை, அம்னோ மற்றும் தேசிய முன்னணி ஏற்றுக் கொண்டால், அவரே மக்களவைத் தலைவராக நியமிக்கப் படுவார்” என்று கூறப்பட்டுள்ளது.

அந்தப் பதவியை முஸ்லீம் ஒருவருக்கு வழங்க வேண்டும் என்று பக்காத்தான் ஆதரவாளர்கள் கருதுவதாகவும், அதன் அடிப்படையில் தான் மகாதீர் ராயிஸை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ராயிஸ் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. மகாதீரின் நியமனத்திற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், மகாதீர் யாரை அந்தப் பதவிக்கு நியமிக்கவிருக்கிறார் என்பதை அவர் அறிவிக்கும் வரையில், தேவையற்ற தகவல்களை பரப்ப வேண்டாம் என்று ஹன்னா இயோ கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker