Latestமலேசியா

100,000 சட்ட விரோத வங்கதேசிகளை மலேசியாவுக்குள் கடத்திய பிரமுகர்!

கோலாலம்பூர், ஜூன்.22- நாட்டின் உள்துறை அமைச்சுடன் அரசியல் தொடர்பு கொண்டிருக்கும் வங்காளதேசத்து தொழிலதிபர் ஒருவர், வங்காள தேசத்திலிருந்து மலேசியாவிற்குள் ஒரு லட்சம் தொழிலாளர்களை சட்ட்டவிரோதமாக கடத்தி வந்துள்ளார்.

மனிதக் கடத்தலில் ஈடுபட்டிருக்கும் அந்தத் தொழிலதிபர், அந்த வங்காளதேசத்து தொழிலாளர்களுக்கு வேலை வாங்கி கொடுத்ததன் வாயிலாக, இரண்டு ஆண்டுகளில் ரிம.2 பில்லியன் வரை வருமானம் பெற்றிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

வேலைகளில் அமர்த்தப்படும் வங்காளதேசத்து தொழிலாளர்கள், அவர்களின் ஏஜெண்டுகளுக்கு ரிம.20,000 (தலா) கட்டணமாக செலுத்தியுள்ளனர். அந்த ஏஜெண்டுகள், அந்தத் தொகையின் பாதியை, அந்தத் தொழிலதிபரின் கீழ் செயல்படும் கும்பலிடம் வழங்கியுள்ளனர்.

அந்தக் கும்பலானது, வங்காளதேசத்து தொழிலாளர்களுக்கான வேலை பெர்மிட் அனுமதி மற்றும் மலேசியாவிற்கு செல்லும் விமான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்து தந்துள்ளன.

கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கி, மலேசியாவிற்குள் 100,000 தொழிலாளர்கள் கடத்தி வரப்பட்டுள்ளனர். மேலும் 100,000 பேர் தங்களுக்கான வாய்ப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வங்காளதேசத்து தொழிலதிபர் ‘டத்தோஶ்ரீ’ பட்டம் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பல கோடி ரிங்கிட் மனிதக் கடத்தல் ஊழல் அந்தத் தொழிலதிபரின் தலைமையில் தான் நடைபெறுகிறது என்பதும் தெரிய வந்துள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு, மலேசியாவிற்கு வங்காளதேசத்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் பொறுப்பை, 10 வங்காளதேசத்து நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளும் ஒப்பந்த உடன்படிக்கையை மலேசியா மற்றும் வங்காளதேசம் கையெழுத்திட்டுள்ளன.

இந்த ஒப்பந்தம், அந்தத் தொழிலதிபரின் வலுவான அரசியல் செல்வாக்கினால் கையெழுத்திடப்பட்டன. அந்த ‘ட்த்தோஶ்ரீ’ தனது வருமானத்தில் ஒரு பங்கை, மலேசிய மற்றும் வங்காளதேசத்து அரசியல்வாதிகளுக்கு வழங்கி வருகிறார் என்றும் கூறப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாது, எஸ்பிபிஏ எனப்படும் இணையம் வாயிலாக வங்காளதேசத்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் அமைப்பு முறையையும், அந்த ‘டத்தோஶ்ரீ’ தான் ஏற்படுத்தினார் என்று பெயர் குறிப்பிட விரும்பாத 40 வயது ஆடவர் தகவல் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker