Latestமலேசியா

60 வயதுக்கு மேலானோருக்கு வேலை: வரி நிவாரணம் தரக் கோரிக்கை!

கோலாலம்பூர், ஜூன்.22- அறுவது வயதிற்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து வேலையில் நீடித்திருக்கும் பட்சத்தில், மத்திய அரசாங்கம் அவர்களுக்கு வரி நிவாரணம் வழங்க வேண்டும் என்று மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, 60 வயதிற்கு மேற்பட்டவர்களை வேலையில் அமர்த்தியிருக்கும் முதலாளிமார்களுக்கு இரட்டிப்பு வரி நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று அந்தக் கூட்டமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியது.

60 வயதிற்கு மேற்பட்டவர்களை வேலையில் வைத்துக் கொள்வதன் வாயிலாக, வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த வேண்டிய அவசியம் முதலாளிகளுக்கு இல்லாமல் போகின்றது என்று மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் ஷம்சூடின் பர்டான் கூறினார்.

“60 வயதிற்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 2030-ஆம் ஆண்டில், இவர்களின் எண்ணிக்கை 15 விழுக்காடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 2030-யில் நாட்டில் 5.8 மில்லியன் பேர் இந்த 60 வயதிற்கும் மேற்பட்டோர் பிரிவில் அடங்குவர்” என்று அவர் சொன்னார்.

ஒவ்வொரு வருடமும், 200,000 பேர் 60 வயதைத் தொடுகின்றனர். அவர்களில் சிறுபான்மையினரே, 60 வயதிற்கும் பின்னர் தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர். பொதுவாக இவர்கள் ஒப்பந்தத்தின் கீழ் தான் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.

சிங்கப்பூரில், 67 வயதிற்குள் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. இதற்கு முன்னர், அந்த நாட்டில் 65 வயதிற்கு உட்பட்டவர்களே வேலையில் அமர்த்தப்பட்டனர் என்று ஷம்சூடின் சொன்னார்.

இந்த முதியர்வர்கள் பிரிவில் உள்ளவர்களை வேலைக்கு அமர்த்துவதன் வாயிலாக, நாம் அவர்களுக்கு உதவ முடியும் என்று ஷம்சூடின் கருத்து தெரிவித்தார். அந்த முதியவர்கள், தங்களின் பிள்ளைகளின் உதவியை நாட வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்காது. பொருளாதார சுதந்திரம் அவர்களுக்கு கிடைக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

இந்த முதியவர்களுக்கும், இவர்களை வேலையில் அமர்த்தும் முதலாளிகளுக்கு அரசாங்கம் சில சலுகைகள், குறிப்பாக வரி நிவாரண சலுகைகளை தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker