Latestமலேசியா

ரிங்கிட் கரன்சி நோட்டு ஒழிப்பு: மோடி பாணியில் மகாதீரா?

கோலாலம்பூர், ஜூன். 27- நடப்பிலுள்ள ரிங்கிட் கரன்சியை அகற்றி புதிய கரன்சி நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப் படலாம் என பிரதமர் துன் மகாதீர் கோடிகாட்டியிருப்பது, இந்தியாவில் கறுப்புப்பணத்தை ஒழிப்பதற்காக அந்நாட்டுப் பிரதமர் மோடி ரூ.500 மற்றும் ரூ.1,000 மதிப்புள்ள கரன்சிகளை செல்லத்தக்கது அல்ல என அறிவித்த பாணியிலான ஒரு நடவடிக்கை போல அமையக் கூடும் என்று கருதப்படுகிறது.

ஆனால், இதெல்லாம் பிரதமர் மகாதீருக்கு புதிது அல்ல. 1998 ஆம் ஆண்டிலேயே ஆசிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் இத்தகைய கரன்சி ஒழிப்பு நடவடிக்கையை அவர் மேற்கொண்டார்.

அந்த காலக் கட்டத்தில் 500 ரிங்கிட் மற்றும் 1,000 ரிங்கிட் கரன்சி நோட்டுக்கள் செல்லத்தக்கது அல்ல என அறிவிக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தில் மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பிலுள்ள கரன்சி நோட்டின் சட்டப்பூர்வப் புழக்கத்தையும் மதிப்பையும் செல்லத்தக்கது அல்ல என அறிவிப்புக்கு ஒப்பான செயலாக இது அமையும் என்ற கருதப்படுகிறது.

தற்போதைய ரிங்கிட்டின் சட்டப்பூர்வ அந்தஸ்தை அகற்றுவதுடன், பழைய கரன்சிகளையும் நாயணங்களையும் புழக்கத்தில் இருந்து அகற்றி, புதிய கரன்சி நோட்டுக்களை அச்சிட்டுப் புழக்கத்தில் விடுவதையே இது காட்டுகிறது என்று சமூக பொருளாதார ஆய்வு மையத்தின் நிர்வாக இயக்குனர் லீ ஹெங் கூய் தெரிவித்தார்.

பொதுவாக பார்த்தால், நடப்பிலுள்ள கரன்சியை செல்லத்தக்கது அல்ல என்ற நிலைப்பாட்டை அறிவிப்பது என்பது வெகு சில காரணங்களுக்காக மட்டுமெ செய்யப்படுகிறது.

கடும் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது, ஊழலை ஒடுக்குவது, சட்டவிரோதமாக பதுக்கப்பட்ட பணத்தை ஒழிப்பது, கறுப்புப் பணத்தை ஒழிப்பது, கள்ள நோட்டு ஒழிப்பு மற்றும் காகிதக் கரன்சிகளை பயன்படுத்தாத சமுதாயத்தை உருவாக்குவது ஆகிய காரணங்களுக்காக மட்டுமே பழைய கரன்சியை ஒழிக்கும் நடவடிக்கை எடுக்கப்படுவது உண்டு என்று லீ ஹெங் கூய் விளக்கினார்.

நடப்பு கரன்சியை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப் படுமானால், பேங்க் நெகாராவுக்கு மிகப்பெரிய செலவு ஏற்படும். குறிப்பாக, புதிய கரன்சி நோட்டுக்களை அச்சிடுவது புதிய நாணயங்களை வார்ப்பது போன்றவை கணிசமான செலவை ஏற்படுத்தும் என்றார் அவர்.

தற்போது நாட்டில் புழக்கத்தில் இருக்கும் கரன்சிகளில் 50 ரிங்கிட் மற்றும் 100 ரிங்கிட் நோட்டுக்கள், 84 புள்ளி 6 விழுக்காட்டை ஈடு செய்கின்றன என்கிறார் லீ ஹெங் கூய்.

இதனிடையே இத்தகைய நடவடிக்கை அதிகச் செலவை ஏற்படுத்தும் என்ற கருத்தை எம்பேங்க் ஆய்வுத்துறைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் அந்தோனி தாஸ் தெரிவித்தார்.

புதிய கரன்சிகள் அச்சிடுவது, பாதுகாப்பு நீரோட்டத்தை அந்த கரன்சிக்குள் ஏற்படுத்துவது, அல்ட்ரா வயலெட் அம்சத்தை உருவாக்குவது, கள்ள நோட்டுகள் உருவாகாமல் தடுக்கத் தேவையான அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் புதிய கரன்சியில் ஏற்படுத்துவது வடிவமைப்பு மற்றும் கரன்சி அச்சிடத் தேவையான விலைமதிப்புள்ள காகிதம் ஆகியவை மிகப் பெரிய செலவை ஏற்படுத்தும் என்றார் அவர்.

கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காகத்தான் இந்தியாவில் 2016 ம் ஆண்டில் 500 மற்றும் 1,000 ரூபாய் கரன்சிகள் நோட்டுகள் மீடகப்பட்டு புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுக்களை பிரதமர் மோடி வெளியிட்டார். எனினும் இந்த நடவடிக்கையால் கறுப்புப் பண ஒழிப்பு நோக்கம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 

 

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker