
ஜோர்ஜ் டவுன், ஜூலை.3- பருவ நீட்டிப்பு காரணமாக பழங்களின் அரசன் என அழைக்கப்படும் டுரியானின் விலை சரிவு கண்டுள்ளதால் தற்போது அப்பழம் மலிவான விலையில் விற்கப்படுகிறது.
கடந்த மே மாதம் நோன்பு மாதம் என்பதால் டுரியானின் விற்பனை பாதிக்கப்பட்டது. ஆகையால், டுரியானின் கையிருப்பு போதுமான அளவை விட அதிகரித்ததால் டுரியான் விலை சரிவு கண்டது.
மகாலிஸ்தார் சாலை அருகே உள்ள ‘டுரியான் பாலிக் புலாவ்’ கடையில் ஒரு பொட்டலம் கொண்ட டுரியான் வெறும் 10 ரிங்கிட்டிற்கு மட்டுமே விற்கப்படுகிறது. அக்கடையில் 10 விதமான டுரியான்களை தவிர்த்து பலாப்பழம், ரம்புத்தான், மங்குஸ்தீன், மாங்காய் ஆகிய பழங்களும் விற்கப்படுகின்றன.
“கடந்த மே மாதம் முதல் டுரியான் பழங்கள் 10 ரிங்கிட்டிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கையிருப்பு அதிகரித்ததாலும் பல வியாபாரிகள் அதனை விற்பனை செய்வதாலும் டுரியானின் விலை குறைந்துள்ளது,” என அதன் உரிமையாளர் லிம் பெங் சூ கூறினார்.
அதோடு, இந்த ஆண்டு டுரியான் பருவம் செப்டம்பர் வரை நீடிக்கும் எனவும் அவர் கருத்துரைத்தார்.