Latestமலேசியா

தனியார் விசா நிறுவனங்களை இழுத்து மூட வேண்டும்! -ராயிஸ்

கோலாலம்பூர், ஜூலை.3- நாட்டின் குடிநுழைவுத் துறை பொது இயக்குநரின் ஒப்புதலின் பேரில் வழங்கப்பட வேண்டிய விசாக்களை, சில நிறுவனங்கள் தங்களின் விருப்பத்திற்கு வழங்கி வருவதால், அந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் முற்றாக ஒடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டான்ஶ்ரீ ராயிஸ் யாத்தீம் கூறினார்.

இந்த நிறுவனங்கள், அதிகாரத்தை தங்களின் கைகளின் எடுத்துக் கொள்வதால், அவை தடுக்கப்பட வேண்டும் என்று அவர் கருத்துரைத்தார்.

“பெய்ஜிங்கில் உள்ள ஒரு நிறுவனம், தனது விருப்பத்திற்கு விசாக்களை வழங்கி வருகிறது. அந்த நிறுவனம், ஒரு மலேசிய விசாவிற்கு ரிம. 107 கட்டணத்தை வசூலித்து வருகிறது. அதிகாரிகள் இந்த நிறுவனத்தை இழுத்து மூட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

அந்த நிறுவனம், பல ஆண்டுகளாக விசா வழங்கும் “தொழிலில்” ஈடுபட்டு வருவதாகவும், அதன் வாயிலாக பல லாபங்களை அடைந்து விட்டதாகவும் ராயிஸ் தெரிவித்தார். கிடைக்கப்பெற்ற லாபத்தை கொண்டு, அந்த நிறுவனம், இந்தியா மற்றும் இதர நாடுகளிலும் தனது கிளை அலுவலகங்களை திறந்திருப்பதாக அவர் கூறினார்.

“நாட்டில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் விருப்பம் கொண்டுள்ளார். அவரின் அந்த எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில், இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும்” என்று ராயிஸ் சொன்னார்.

“நாட்டினுள் யார் நுழையலாம் அல்லது நுழையக் கூடாது என்று முடிவெடுக்கும் அதிகாரம் குடிநுழைவு துறையின் பொது இயக்குநருக்கு உண்டு. அவர் தனது அதிகாரத்தை முறையாக உபயோகிக்க வேண்டும்.

“சிலர் நாட்டினுள் படிப்பதற்காக வருகிறார்கள். மூன்று மாதங்கள் கழித்து, அவர்கள் பல்கலைக்கழகங்களில் பயிலவில்லை என்பது தெரிய வருகிறது” என்றார் அவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker