Latestமலேசியா

அன்னிய தொழிலாளர்கள் தடை: படிப்படியாக அமல் படுத்துக!! –மசீச

கோலாலம்பூர், ஜூலை.4- வெளிநாட்டு தொழிலாளர்கள் மீதான தடைகளை பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று மசீச கட்சியின் மகளிர் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஏற்புடைய விரிவான மாற்றுத் திட்டங்களை அரசாங்கம் முதலில் அவர்களுக்கு வழங்க வேண்டும்.

வெளிநாட்டு தொழிலாளர்களை மட்டுமே சார்ந்திருக்கும் அவர்களின் செயல்முறைகளை திருத்திக் கொள்ளும் வாய்ப்பு, அத்திட்டத்தின் வாயிலாக அந்நிறுவனங்களுக்கு வழங்கப் பட வேண்டும் என்று மசீச மகளிர் பிரிவின் உதவித் தலைவர் டத்தோ ஓங் சொங் ஸ்வேன் கூறினார்.

“வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அரசாங்கம் கடுமையாக நடந்துக் கொள்ள கூடாது. அவ்வாறு செய்தால், சில துறைகளுக்கு கடும் பாதிப்பு நேரக் கூடும்” என்று அவர் கருத்துரைத்தார்.

சில துறைகளில் வெளிநாட்டு வேலையாட்கள் தான் அதிகமாக உள்ளனர். அத்துறைகளில் அவர்களின் எண்ணிக்கை குறைக்கப் பட்டால், அத்துறையின் வேலைபாடு ஸ்தம்பிக்கும் என்று ஓங் சொன்னார்.

அந்தத் துறைகளில் உள்நாட்டு தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற பட்சத்தில், அவற்றின் இலக்குகள் மற்றும் சலுகைகளை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அதுமட்டுமல்லாது, போட்டித் தன்மையை அதிகரிக்கும் வகையில், நவீன தொழில்நுட்பங்களும் அத்துறைகளில் அறிமுகப் படுத்தப் பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். அவ்வாறு செய்வதன் வாயிலாக, அத்துறைகள் பெரும் மாற்றம் கண்டு சிறப்பிக்கும் என்றும் அவர் கூறினார்.

தற்போதைய சூழ்நிலையில், தங்களின் வணிக மற்றும் வியாபாரத்தை மேம்படுத்த சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சிரமப்படுகின்றன என்றும், அந்த நிறுவனங்களுக்கு போதிய நிதிகள் ஒதுக்கப்படுவதில்லை என்றும் ஓங் தெரிவித்தார்.

அனைத்துலக சந்தையை அடைய நினைக்கும் அவர்களின் முயற்சிகளுக்கு, போதிய அரசாங்க உதவிகள் தரப்படுவதில்லை என்பதால், அவர்களால் பெருமளவில் முன்னேற முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker