Latestவிளையாட்டு

இங்கிலாந்தின் தலைதப்பியது: காலிறுதியில் சுவீடனுடன் மோதல்!

மாஸ்கோ, ஜூலை, 4- உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின் 2ஆவது சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து குழு 4-3 என்ற பெனால்டிக் கோல்களின் வழி கொலம்பியாவை வீழ்த்தியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு காலிறுதி ஆட்டத்திற்கு அது தகுதி பெற்றுள்ளது.

வழக்கமான ஆட்ட நேரத்தில் இரண்டு குழுக்களுமே 1-1 என்ற கோல் நிலையில் சமமாக இருந்தன. பிற்பகுதி ஆட்டத்தின் 57ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஹர்ரி கேன் ஒரு கோலை அடித்தார்.

இந்நிலையில் ஆட்டம் முடிய சில வினாடிகளே இருந்த வேளையில், கொலம்பியா ஒரு கோலைப் புகுத்தி ஆட்டத்தை சமமாக்கியது இங்கிலாந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கூடுதல் நேரம் வழங்கப்பட்ட பின்னரும் ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்ததால் பெனால்டிகள் வழங்கப்பட்டன. இதில் 4-3க்கு என்ற கோல்களில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

இதன் வழி காலிறுதி ஆட்டத்தில் சுவீடனுடன் இங்கிலாந்து மோதவிருக்கிறது. 2ஆவது சுற்றில் சுவீடன் குழு 1-0 என்ற கோல்கணக்கில் சுவிட்சர்லாந்தை வென்று காலிறுதிச் சுற்றுக்கு தேர்வு பெற்றது. காலிறுதியில் அது இங்கிலாந்துடன் மோதுகிறது. இங்கிலாந்து வென்றால், அடுத்து அரையிறுதியில் அது ரஷ்யா அல்லது குரோசியாவுடன் மோத வேண்டியிருக்கும்.

பொதுவாக, கால்பந்து விமர்சகர்கள் இது பற்றிக் கருத்துக் கூறிய போது இங்கிலாந்து குழு உண்மையிலேயே அதிர்ஷ்டம் மிக்க குழு என வர்ணித்தனர். ஓரளவுக்கு வெற்றி வாய்ப்பை எதிர்கொள்ளும் வகையிலேயே அடுத்தடுத்த ஆட்டங்கள் இங்கிலாந்துக்கு சாதகமாக உள்ளன என அவர்கள் குறிப்பிட்டனர்.

உலகக் கிண்ணப் போட்டியில் இறுதி ஆட்டம் வரை செல்ல இதைவிட சிறந்த வாய்ப்பு இங்கிலாந்துக்கு இனி கிடைக்காது என்று அவர்கள் கூறினர்.

மறுபுறம் இதர காலிறுதி ஆட்டங்கள் மிக கடுமையானவை என வர்ணிக்கப் பட்டது. உருகுவே குழு பிரான்சுடனும் பிரேசில் குழு பெல்ஜியத்துடனும் ரஷ்யக் குழு குரோசியாவுடனும் மோதவுள்ளன. நாளை ஓய்வு நாள். நாளை மறுநாள் வெள்ளியன்று காலிறுதிப் போட்டிகள் தொடங்கவுள்ளன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker