Latestமலேசியா

நஜிப் வழக்கு செய்திகளுக்கு கட்டுப்பாடு: வழக்கறிஞர் கோரிக்கை ஏற்பு!

கோலாலம்பூர், ஜூலை.4- முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கிற்கு எதிரான விசாரணை குறித்த தகவல்கள் ஊடகங்களில் பிரசுரிக்கப் படுவதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று அவரது தரப்பு வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, உயர் நீதிமன்ற நீதிபதி சோஃபியான் அப்துல் ரசாக், இடைக்கால ஒழுங்குமுறை உத்தரவை (interim gag order) பிறப்பித்துள்ளார்.

தமது கட்சிக்காரரான நஜிப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ள வேளையில், ஊடகங்களில் வெளியிடப் படும் அறிக்கைகள், நஜிப்பின் வழக்கை பாதிக்கும் என்பதால், இந்த இடைக்கால ஒழுங்குமுறை உத்தரவு பிறப்பிக்கப் பட வேண்டும், நஜிப்பின் வழக்கறிஞர் டான்ஶ்ரீ ஷாஃபி அப்துல்லா கேட்டுக் கொண்டார்.

நஜிப் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப் படுவதற்கு முன்னர், அவர் மீது ஊடகங்கள் பல்வேறான குற்றங்களை சுமத்தின என்றும், அவர் ஒவ்வொரு நாளும், ஊடகவியலாளர்களால் விசாரணைக்கு உட்படுத்தப் படுகின்றனர் என்றும் ஷாஃபி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

நிதி முறைக்கேடு தொடர்பிலான இவ்வழக்கு குறித்து ஊடகங்கள் ஆதாரமற்ற கருத்துகளையோ அல்லது தகவல்களையோ பிரசூரிக்காமல், பரப்பாமல் இருப்பதற்காக இந்த இடைக்கால ஒழுங்குமுறை உத்தரவு வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

ஷாஃபியின் அந்த வேண்டுகோளுக்கு, அரசு தரப்பில் வாதாடும் சட்டத்துறை தலைவர் தோம்மி தோமஸ் எதிர்ப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ், மலேசியர்களுக்குப் பேச்சு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்றும், இந்த இடைக்கால ஒழுங்குமுறை உத்தரவு, பேச்சு சுதந்திரத்தை கட்டுப் படுத்தும் என்றும் தோமஸ் கூறினார்.

இடைக்கால ஒழுங்குமுறை உத்தரவு வழங்க வேண்டும் என்பதற்கு பதிலாக, ஷாஃபி அதிகாரப்பூர்வ மனுவை சமர்ப்பித்திருக்க வேண்டும் என்று தோமஸ் தெரிவித்தார்.

இதனிடையில், இவ்விவகாரம் தொடர்பில் உச்ச நீதிமன்ற நீதிபதி இடைக்கால ஒழுங்குமுறை உத்தரவை பிறப்பிப்பார் என்று தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று தோமஸ் செய்தியாளர்களிடம் சொன்னார்.
இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து அதிகாரப்பூர்வ மனுவை ஆகஸ்டு மாதம் தாங்கள் சமர்ப்பிக்கவிருப்பதாக சட்டத்துறை தலைவரான தோமஸ் அறிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker