Latestவிளையாட்டு

5 முறை சாம்பியனான பிரேசிலை வீட்டுக்கு அனுப்பியது பெல்ஜியம்!

ரஷ்யா, ஜூலை.7- 2018 உலகக் கிண்ணத்தின் பேரதிர்ச்சிகளுள் ஒன்றாக, ஐரோப்பிய அணியான பெல்ஜியம், 5 முறை உலகக் கிண்ண சாம்பியன் பட்டம் வென்ற பிரேசிலை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிப் பெற்றது.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக் கிண்ண கால்பந்து போட்டிகளில், யாருமே எதிர்பார்க்காதவை எல்லாம் வரிசைக் கட்டி நடந்து கொண்டிருக்கின்றன.

கிண்ணத்தை வெல்ல அதிகம் வாய்ப்புள்ள நாடுகளாக பார்க்கப்பட்ட ஸ்பெயின், ஜெர்மனி, அர்ஜென்டினா ஆகிய அணிகள் தொடரில் இருந்து சீக்கிரமே நாக் அவுட் செய்யப்பட்டன.

தற்போது காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், முன்னதாக உருகுவேயை பிரான்ஸ் வீழ்த்தியது. மற்றொரு போட்டியில், பலம் வாய்ந்த பிரேசில், பெல்ஜியம் அணியுடன் மோதியது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில், பிரேசில் தான் முதல் கோல் அடிக்கும் என எதிர்பார்த்திருந்த நேரத்தில், 13-வது நிமிடத்தில், பெல்ஜியத்துக்கு கார்னர் கிக் வாய்ப்பு கிடைக்க,  அந்த அணியின் சாட்லி அடித்த அந்த பந்து, பிரேசில் வீரர் பெர்னாண்டினோ தலையில் பட்டு ஓன் கோலாக உள்ளே புகுந்தது.

இந்த கால்பந்து தொடரில் எல்லா ஆட்டங்களிலும் வெற்றிப் பெற்ற பெல்ஜியம் பிரேசிலுடன் கூடுதல் வேகத்துடன் ஆடியது. 31-வது நிமிடத்தில், நட்சத்திர வீரர் கெவின் டி ப்ருயின், தூரத்தில் இருந்து அடித்த ஷாட், பெல்ஜியத்தின் இரண்டாவது கோல் ஆனது.

பிற்பாதி ஆட்டத்தில், பிரேசில் தொடர்ந்து பல கோல் வாய்ப்புகளை உருவாக்கியது. 76-வது நிமிடம், அந்த அணியின் குட்டினோ கொடுத்த பந்தை, அகுஸ்டோ தலையால் முட்டி கோலாக்கினார்.

போட்டியை சமன் செய்ய பிரேசில் கடும் முயற்சி செய்தது. ஆனால், பெல்ஜியத்தின் அசத்தலான தற்காப்பு ஆட்டம், பிரேசிலுன் எல்லா முயற்சிகளையும் முறியடித்தது.

இறுதியில் 2-1 என்ற கோல் எண்ணிக்கையில்,  பிரேசிலை வீட்டுக்கு அனுப்பியது பெல்ஜியம். அரையிறுதி போட்டியில், பிரான்ஸ் அணியுடன் பெல்ஜியம் மோதுகிறது.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker