Latestமலேசியா

சட்டமன்ற உறுப்பினர் ஷெர்லீனாவுக்கு கொலை மிரட்டல்!

ஜோர்ஜ் டவூன், ஜூலை.11- பினாங்கு மாநிலத்தில் ஶ்ரீடெலிமா சட்டமன்ற உறுப்பினரான ஷெர்லீனா அப்துல் ரஷீட்டிற்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்று அனுப்பப் பட்டுள்ளது.

“மரணம் உனக்காக காத்திருக்கிறது” என்று மலாய் மொழியில் சிவப்பு நிற பேனாவில் எழுதப் பட்டிருந்த அந்தக் கடிதம், ஐலண்ட் கிளேட்ஸ் என்ற பகுதியுள்ள தனது சேவை மையத்தின் அஞ்சல் பெட்டியில் நேற்று மதியம் 3.30 மணியளவில் கண்டெடுக்கப் பட்டதாக ஷெர்லீனா தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, ஜசெக தலைவர்களில் ஒருவரான ஷெர்லீனா, ஜெலுத்தோங் காவல் நிலையத்தில் நேற்று இரவு 7 மணியளவில் போலீஸ் புகார் கொடுத்தார்.

“என்னையும், எனது சேவை மையத்தின் உறுப்பினர்களையும் மிரட்டுவது மிகப் பெரிய குற்றமாகும். அந்தக் கடிதத்தை எழுதியவரின் கைரேகைகள் அதில் படிந்துள்ளதா என்பதை தடவியல் வல்லுநர்களின் உதவியோடு போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்” என்று ஷெர்லீனா செய்தியாளர்களிடம் கூறினார்.

இதனிடையில், ஜசெகவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஷெர்லீனா இஸ்லாமிய அமைப்புகள், குறிப்பாக ‘ஜாக்கிமை’ தாக்கத் தயங்க மாட்டார் என்று முகநூல் பக்கம் ஒன்று கூறியுள்ளது தொடர்பாகவும், தாம் போலீசில் புகார் செய்துள்ளதாக அவர் தெரிவித்துக் கொண்டார்.

ஷெர்லீனாவிற்கு அனுப்பப் பட்டுள்ள கொலை மிரட்டல் கடிதம் குற்றவியல் சட்டத்தின் 507-ஆவது பிரிவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாக வடகிழக்கு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அனுவார் ஒமார் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker