Latestமலேசியா

மயக்கத்தில் அபாயகரமாக காரோட்டிய முதியவர் (VIDEO)

பெட்டாலிங் ஜெயா, ஜூலை.11- இரத்த அழுத்தக் குறைவின் காரணமாக மயக்கத்தில் காரை அபாயகரமாக ஓட்டிச் சென்ற முதியவர் ஒரே நாளில் சமூக ஊடகங்களில் பிரபலமானார். 79 வயது தீ தியோ யோங் என்ற அந்த முதியவர், கூட்டரசு நெடுஞ்சாலை தோறும் சாலையின் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் மாறி மாறி காரைச் செலுத்தியது மட்டுமில்லாமல் பல வாகனங்களை இடித்தும் இடிக்காதது போல காரை ஓட்டிச் சென்ற காட்சிகள் அடங்கிய காணொளி மக்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

நேற்று பிற்பகல் மணி 2.15 அளவில், ஹோண்டா சிஆர்வியில் பயணித்த அம்முதியவர் தனது காரை வேகமாகச் செலுத்தவில்லை என்றாலும், சாலையின் தடுப்புச் சுவரையும், சாலையில் பயணித்த மற்ற வாகனங்களையும் மோதிக் கொண்டே சென்றிருக்கிறார்.

அப்போது அவ்வழியாகச் சென்றுக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளோட்டியான முகமட் பாய்சால் என்பவர், முதியவரின் காரைப் பின் தொடர்ந்து சென்றிருக்கிறார். “காரை ஓரமாக நிறுத்துங்கள்” என பல முறை கத்திச் சொல்லியும் அம்முதியவர் ஏதும் செய்ய முடியாத நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அதனால் வேறு வழியின்றி மோட்டார் சைக்கிளை ஓரத்தில் நிறுத்திவிட்டு ஓடிச் சென்று முதியவரின் கார் சாவியை வெளி எடுத்தபோதுதான் தான் பெருமூச்சு விட்டதாக பாய்சால் பேட்டியின்போது கூறினார். அதுமட்டுமின்றி, ஏதும் அசம்பாவிதம் ஏற்படலாம், அதற்கு ஆதாரம் தேவைப்படும் என்பதற்காக அச்சம்பவத்தை விடியோ எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

கார் நின்றவுடன் அங்கு வந்தடைந்த போக்குவரத்து போலீசார் முதியவரை போலீஸ் நிலையத்து அழைத்துச் சென்றனர். முதியவரின் பிள்ளைகளைத் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கப்பட்டது. போலீஸ் நிலையத்துக்கு வந்த அவருடைய பிள்ளைகள் அவரை துரோப்பிக்கான மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker