Latestமலேசியா

1எம்டிபி ஊழல்: அறுவரிடம் சுவீஸ் அதிகாரிகள் விசாரணை!

கோலாலம்பூர், ஜூலை.11- கோலாலம்பூர், ஜூலை.11- 1எம்டிபி நிதி முறைக்கேடு விவகாரத்தில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் கைதாகி நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டதைத் தொடர்ந்து, அதில் சம்பந்தப் பட்டுள்ளதாக நம்பப்படும் அறுவரை சுவிட்சர்லாந்து அரசு தரப்பு வழக்கறிஞர்கள் விசாரணைக்கு உட்படுத்தவிருக்கின்றனர்.

சுவிட்சர்லாந்து நாட்டின் பிரபலமான ஃபால்கன் பிரைவட் பாங்க் மற்றும் பி.எஸ்.ஐ எஸ்.ஏ ஆகிய இரு வங்கிகளும் 1எம்டிபி விவகாரத்தில் சம்பந்தப் பட்டுள்ளன என்றும் தாங்கள் கருதுவதாக அந்நாட்டின் சட்டத்துறை தலைவர் மைக்கல் லாவ்பேர் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக ஒதுக்கப் பட்ட கோடிக் கணக்கான 1எம்டிபி நிதி, எவ்வாறு சுவிட்சர்லாந்து வங்கிகளுக்கு பரிவர்த்தணை செய்யப் பட்டது என்பது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் விசாரணை செய்து வருகிறது.

அவ்விவகாரம் தொடர்பில், (முந்தைய) மலேசிய அரசாங்கம் தேவையான ஒத்துழைப்பை வழங்கவில்லை என்று தொடக்கத்திலிருந்து லாவ்பேர் குறைப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நஜிப் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மலேசியாவின் தகுதிவாய்ந்த அதிகாரிகளுடன் அந்த விசாரணை தொடர்பில் கலந்தாலோசிக்க தாங்கள் விருப்பம் கொண்டுள்ளதாக சுவிட்சர்லாந்து சட்டத்துறை அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. மலேசிய சட்டத்துறை தலைவர் டோம்மி தோமசை சுவிட்சர்லாந்து சட்டத்துறை தலைவர் மைக்கல் லாவ்பேர் சந்தித்துப் பேசினார்.

கடந்த மே மாதம், பெட்ரோ சவூதி நிறுவனத்தின் இரண்டு முன்னாள் அதிகாரிகள் மீது சுவிட்சர்லாந்து அரசாங்கம் குற்றவியல் நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப் பட்டது.

பெட்ரோ சவூதி மற்றும் 1எம்டிபி நிறுவனத்திற்கு இடையிலான கூட்டு முயற்சியில், 1எம்டிபிக்கு சொந்தமான ரிம.1 பில்லியன் தொகையை, பெட்ரோ சவூதிக்கு பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கப் பட்டது.

ஆனால், 1எம்டிபி நிறுவனத்தினர் மற்றும் சிலர், அந்தத் தொகையிலிருந்து ரிம.700 மில்லியனை பெட்ரோ சவூதிக்குச் சம்பந்தப் படாத ஒரு வங்கிக் கணக்கிற்கு பண பரிமாற்றம் செய்துள்ளனர் என்று சுவிட்சர்லாந்து அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

தாங்கள் தவறேதும் இழைக்கவில்லை என்று பெட்ரோ சவூதி நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். நஜிப்பும் இதுவரை தமக்கும் அந்த நிதி முறைக்கேட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்து வருகிறார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker