Latestமலேசியா

‘அயூஷ்மான் பவ’ – தெய்வீகப்பாடல் இசைவட்டு வெளியீட்டு விழா

கோலாலம்பூர், ஜூலை.12 – கடந்த ஜூன் 14-ஆம் தேதி அஜெண்டா சூரியா ஏற்பாட்டில் 16-ஆவது ஆண்டாக வெற்றிகரமாக நடைபெற்ற வர்த்தகக் கண்காட்சி விழாவில் நாட்டின் பிரபலப் பாடகியான பிருந்தா ரிஷிகுமாரின் “அயூஷ்மான் பவ” தெய்வீகப் பாடல் இசைவட்டு அதிகாரப்பூர்வமாக வெளியீடு கண்டது.

இந்த இசைவட்டில் 7 தெய்வீகப் பாடல்கள் உள்ளடங்கி உள்ளன. ஜகத்குரு ஆதிசங்கரர் அருளிய கணேச பஞ்சரத்தினம், மாணிக்கவாசகப் பெருமான் அருளிய சிவபுராணம், அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் ஆகிய இந்து சமயத் தெய்வீகப்பாடல்களுக்குப் புதுமையான இசை அமைக்கப்பட்டுள்ளது.

ரிஷிமார்களும் மகான்களும் அருளிய இப்பாடல்களை இளைய தலைமுறையினருக்கு மீண்டும் நினைவுறுத்தும் நோக்கிலும் அனைத்து வயதினரையும் கவரும் வகையிலும் இப்பாடல்கள் அமைந்துள்ளன. அப்பாடல்களுக்கு துளியும் மாசு படாத வகையில் பாடல்களை பாடியுள்ளார் பிருந்தா. பாடல்களை பாடிய விதம் காதுகளுக்கு தேவகானமாக ஒலித்தன.

பாடல்களுக்கு இசையின் மூலம் மெருகூட்டியுள்ளனர் இந்த ஆல்பத்தின் இசையமைப்பாளர்கள் பாலன்ராஜ், எம்.ஜெகதீஸ் ஆகியோர். இவர்கள் இணைந்து பல பாடல்களுக்கு இசையமைத்திருந்த போதும், இந்த இசை ஆல்பம் இவர்களின் திறமைக்குச் சான்றாக அமைந்துள்ளது.

மறுவடிவம் என்ற பெயரில் பல பக்தி பாடல்கள் கொலை செய்யப்பட்டிருப்பதை நான் கண்கூடாகப் பார்த்திருப்போம், கேட்டிருப்போம். ஆனால், இன்றைய இளைஞர்களுக்கும் பக்தி பாடல்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் கொஞ்சமும் பக்தி குறையாமல் பாடலுக்கு இசை வடிவம் கொடுத்திருக்கிறார்கள் பாலன்ராஜும் ஜெகதீசனும்.

இவ்விழாவில் அஜெண்டா சூரியா தலைமை நிர்வாகி திரு.ஜெகன் ராவ், மாமன்ற அறங்காவலரும் ஆலோசகரும் சனாதனத் தர்ம அறவாரியத்தின் தலைவருமாகிய தர்மப் பூஷணம் சிவஸ்ரீ அ.ப.முத்துக்குமார சிவாச்சாரியார், மாமன்ற அறங்காவலரும் ஆலோசகரும் பிரதமர் துறையின் கீழ் இயங்கும் செடி இலாகாவின் தலைமை இயக்குநர் முனைவர் டத்தோ என்.எஸ்.இராஜேந்திரன், மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் தேசியத் தலைவர் திரு.அ.இராதாகிருஷ்ணன், மலேசிய இந்து இளைஞர் பேரவையின் தேசியத் தலைவர் செ.அருண்குமார், அனைத்துலகக் கிருஷ்ணா புரிந்துணர்வு சங்கத்தின் பொதுச் செயலாளர் சிம்மேஸ்வர பிரபு ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

“அயூஷ்மான் பவ” இசைவட்டை நாடு முழுவதும் சிடி, விசிடி விற்பனை மையங்களில் நியாயமான விலைகளில் விற்பனைக்கு பெற்றுக் கொள்ளலாம். மேல் விவரங்களைப் பெற விரும்புவர்கள் 016 – 207 6117 எண்ணை அழைக்கலாம்.

Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker