Latestஇந்தியா

பேசாமல் தாஜ்மஹாலை மூடிவிடுங்கள்! -உச்ச நீதிமன்றம் கோபம்!

புதுடில்லி, ஜூலை.12- உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பாதுகாக்க முடியாவிட்டால் “அதை மூடிவிடுங்கள் அல்லது இடித்து தள்ளி விடுங்கள்” என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆக்ராவில் முகலாய மன்னர் ஷாஜகான், தனது மனைவி மும்தாஜ் நினைவாக கட்டிய தாஜ்மஹாலை காண உலகம் முழுவதுமிருந்து சுற்றுப் பயணிகள் வருகின்றனர். இதன் மூலம் மத்திய அரசு பெரிய அளவில் அந்நிய செலவாணியை ஈட்டி வருகிறது.

இத்தகைய புகழ்மிக்க தாஜ்மஹால் இருக்கும் பகுதியில் நிறைய தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன. இதனால் வெள்ளி பளிங்குகல் தாஜ்மஹால் மாசுபட்டு நிறம் மங்கி செம்பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது.

இந்நிலையில், தாஜ்மஹாலை பாதுகாக்க வேண்டும் எனவும் இது குறித்து மத்திய அரசுக்கு அறிவுறுத்த கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி எம்.பி லோகூர் அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதிகள் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து கூறியதாவது:-

உலகின் பொக்கிஷங்களில் ஒன்றான தாஜ்மஹாலை காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் வருகின்றனர். ஈபிள் டவர் உள்ளிட்ட உலக அதிசயங்களை பாதுகாக்க பிற நாடுகளில் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

தாஜ்மஹாலுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அது நமக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும் பெரிய இழப்பு தான்.

ஆகையால், தாஜ்மஹாலை முறையாக பாதுகாப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தாஜ்மஹாலை மூடிவிடலாம் அல்லது அதை இடித்து தள்ளிவிடலாம் என்று மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker