Latestமலேசியா

ரோஸ்மா நகை விவகாரம்: அந்தக் கடையில் நகை வாங்குவது எளிதல்ல!

கோலாலம்பூர், ஜூலை.12- முன்னாள் பிரதமர் நஜிப்பின் துணைவியார் தேர்வு செய்வதற்காக நகைகளை வரவழைத்த லெபனானின் Global Royalty Trading SAL என்ற நகை விற்பனை நிறுவனத்திடம் அவ்வளவு எளிதில் நகைகளை வாங்கி விட இயலாது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

பணம் வைத்திருக்கும் அனைவரும் Global Royalty Trading SAL நகை விற்பனை நிறுவனத்திற்கு சொந்தமான நகைகளை அவ்வளவு எளிதில் வாங்க முடியாது.
பணத்திற்கும் மேலான அதிகாரம், மற்றும் ‘மவுசு’ கொண்டிருப்பவர்களே அந்தக் கடையில் நகைகளை வாங்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

லெபனான் நாட்டைச் சேர்ந்த Global Royalty Trading SAL நகை விற்பனை நிறுவனத்தில், அரச குடும்பத்தினர், பிரபல நடிகைகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பிரத்யேகமாக நகைகள் தயாரிக்கப் பட்டு, விற்பனை செய்யப் படுகின்றன.

பிரபல நடிகைகளான ஏஞ்சலீனா ஜோலி, நவோமி கேம்பல், ஓப்ரா வின்ஃப்ரீ, சவூதி அரேபியாவின் அரச குடும்பத்தினர், மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் Global Royalty Trading SAL-யின் வாடிக்கையாளர்களாவர்.

பொதுவாக, அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் நேரில் சென்று நகைகளை வாங்க மாட்டார்கள். மாறாக, அந்நிறுவன ஊழியர்கள், அந்த நகைகளை தங்களின் வாடிக்கையாளருக்கு எடுத்துச் சென்று, அவற்றை நேரிடையாக விற்பனை செய்வார்கள் என்று தகவல் வெளியிடப் பட்டுள்ளது.

“வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த நகைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை வாங்கிக் கொள்வார்கள். கட்டணங்களை சரிவர செலுத்தும் வாடிக்கையாளர்களிடம் மட்டும் தான் இந்த விற்பனை செய்யப்படும்” என்று அந்தத் தகவல் வட்டாரம் கூறியது.

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் துணைவியார் டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோர் மட்டுமல்லாது, அந்த நகை விற்பனை நிறுவனத்திற்கு மலேசியாவில் மேலும் சில பிரபல வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Global Royalty Trading SAL நகை விற்பனை நிறுவனத்திடமிருந்து 14.79 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (ரிம. 60 மில்லியன்) ரோஸ்மா மன்சோர் நகை வாங்கியதாகவும், அந்த நகைக்கான தொகையை இன்னும் செலுத்தவில்லை என்று அந்நிறுவனம் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker