Latestமலேசியா

விசா கட்டணத்தைக் குறைப்பீர்! மோடிக்கு ஹிண்ட்ராப் கோரிக்கை!

கோலாலம்பூர், ஜூலை.12- இந்தியாவிற்கு செல்லவிரும்பும் மலேசியர்களுக்கான இந்தியா விசா கட்டணம் குறைக்கப் பட வேண்டும் என்று கோரி, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஹிண்ட்ராப் அமைப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

முகப்பிடங்களில் பெறப்படும் இந்திய விசா கட்டணம், ரிம.462.45-ஆக உயர்த்தப் பட்டுள்ளதை, மலேசிய இந்தியர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை அக்கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளதாக ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி கூறினார்.

இந்தியாவிலுள்ள உறவுகளை சந்திக்க விரும்பும் மலேசியர்களுக்கு, இந்த விசா கட்டண உயர்வு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது என்று வேதமூர்த்தி தெரிவித்தார்.

“முன்பு ஆறு மாதங்களுக்கான இந்திய விசாவை பெற ரிம.194.56 வசூலிக்கப் பட்டது. அந்தத் தொகையை பலரால் செலுத்த முடிந்தது. ஆனால், இந்தப் புதியக் கட்டணத்தை அனைவராலும் செலுத்த முடியாது.

“வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்தியாவிற்கு புனித யாத்திரையை மேற்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டுள்ளவர்களுக்கு இது பெரிய சோதனையாக அமைந்துள்ளது” என்று அவர் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

ஒரு ஆண்டிற்கான விசா முறையை அமல்படுத்துவை காட்டிலும், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் விசாக்களை இந்திய அரசாங்கம் வழங்க வேண்டும் என்று வேதமூர்த்தி நரேந்திர மோடியை கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவிற்கான இ-விசாவின் கட்டணமும், ரிம.200-லிருந்து ரிம.320-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விசா கட்டண அதிகரிப்பு ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து அதிகாரப்பூர்வமாக அமலில் உள்ளது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker