Latestமலேசியா

சிறார் திருமணம்: அதிகாரம் இல்லையா? அரசு கை கழுவுவதா? – அமைப்புகள்

கோலாலம்பூர், ஜூலை.12- சிறார் திருமணங்களை எதிர்க்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை என்ற மகளிர், குடும்ப, சமுதாய மேம்பாட்டு அமைச்சர் டத்தோஶ்ரீ வான் அஸீஸா வான் இஸ்மாயிலின் பதிலால் சில அரசு சாரா அமைப்புகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

ஐ.நா குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு மீதான உடன்படிக்கையை காப்பாற்ற வேண்டிய அவசியம் மலேசியாவிற்கு உண்டு. அதன் அடிப்படையில், நாட்டின் சிறார்களை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என்று சிஸ்டர்ஸ் இன் இஸ்லாம் மற்றும் பெண்கள் வழக்கறிஞர்கள் சங்கம் கூறியுள்ளன.

“ஒவ்வொரு சிறுமிகளும், நாட்டின் எதிர்காலத்திற்கு பங்களிக்கக் கூடும். அந்த வகையில், எந்தச் சிறுமியின் எதிர்காலமும் பாழாகி விடக் கூடாது” என்று அந்த அமைப்புகள் கூறின.

“இஸ்லாமிய சட்டத்தின் படி நடத்தப் படும் திருமணங்களை ரத்து செய்யவோ அல்லது தடைச் செய்யவோ அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை என்று அரசாங்கம் கை கழுவக் கூடாது. சிறார்களின் உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கம் பாடுபட வேண்டாமா?” என்று அவ்விரு அமைப்புகள் கூட்டு அறிக்கை ஒன்றில் கேள்வி எழுப்பியுள்ளன.

கிளந்தான் மாநிலத்தைச் சேர்ந்த 41 வயது ரப்பர் மரம் வெட்டும் தொழிலாளி ஒருவன், 11 வயது சிறுமியை திருமணம் செய்துக் கொண்டது அம்மாநில ஷாரியா சட்டத்தின் கீழ் ஏற்றுக் கொள்ளப் படுவதாக துணைப் பிரதமர் வான் அஸீஸா தகவல் தெரிவித்தார்.

சட்டத்தில் அதற்கு இடம் இல்லை என்ற போதிலும், இஸ்லாமிய சட்டம் அதனை ஏற்றுக் கொள்கிறது. இஸ்லாமிய சட்டத்தை எதிர்க்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை என்று வான் அஸீஸா கூறியிருந்தார் என்பது குறிப்பிட்த்தக்கது.

“அரசாங்கத்தின் அச்செயல் வருந்தத்தக்க வகையில் அமைந்துள்ளது. அரசாங்கம் அதிகாரத்தை உபயோகிக்க நினைத்தால் உபயோகிக்கலாம். ஒன்றும் செய்யலாகாது என்று கூறி தப்பித்துக் கொள்ள கூடாது” என்று அவ்விரு அமைப்புகளும் கேட்டுக் கொண்டுள்ளன.

சிறுவர்களின் குழந்தைத்தன்மைகளை இந்தத் திருமணங்கள் பறித்துக் கொள்கின்றன. பள்ளிக்குச் சென்று பாடம் பயில வேண்டிய வயதில், வயதுக்கு மீறிய சுமைகளையும் பொறுப்புகளையும் சுமக்க வேண்டிய கட்டாயத்திற்கு, அச்சிறார்கள் உட்படுத்தப் படுகின்றனர் என்று அந்த அமைப்புகள் கருத்துரைத்தன.

சிறு வயதிலேயே பாலியல் வன்முறைகளுக்கு அவர்கள் ஆளாகின்றனர். பாலியல் உறவுகளுக்கு அச்சிறுவர்கள் தயார் படுத்தப் படுகின்றனர். இது சட்டப் படி குற்றமாகும் என்று அந்தக் கூட்டு அறிக்கையில் அந்த அமைப்புகள் கூறின.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker