
கோலாலம்பூர், ஜூலை. 13- நாட்டில் வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்குச் சேர்க்கும் பொறுப்பை மனித வள அமைச்சு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மனித உரிமை அமைப்பான தெனாகனித்தா கேட்டுக் கொண்டுள்ளது.
அந்தத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் செயல்முறை குறித்து ஆவணங்கள் வடிவில் விவரிக்கப் பட்டுள்ள போதிலும், அதனை முறையாக செயல் படுத்துவது சிரமம்.
அதன் அடிப்படையில், அந்தத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் தலையாய ஏஜென்சியாக மனித வள அமைச்சு செயல்பட வேண்டும் என்று தெனாகனித்தா நிர்வாக இயக்குநர் குளோரீன் ஏ. தாஸ் கேட்டுக் கொண்டார்.
“வேலைக்கு அமர்த்தப் படும் வெளிநாட்டு தொழிலாளர்களின் பின்னணியை ஆராய்வதற்கும் அவர்களுக்கு விசா வழங்கப் பட வேண்டுமா இல்லையா என்ற முடிவை எடுக்கும் பொறுப்புகள் மட்டும் குடிநுழைவு இலாகாவிடம் வழங்கப் பட வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வேலை தேடி தரும், மற்றும் அவர்களை வேலைக்கு சேர்க்கும் சில தனியார் ஏஜென்சிகள் வெறும் லாப நோக்கத்தில் தான் செயல் படுகின்றன என்று குளோரீன் சாடினார்.
“லாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படும் இந்த ஏஜென்சிகள், ஆட்சேர்ப்பிற்கு அதிகமான கட்டணங்களை வசூலிக்கின்றன” என்று அவர் சொன்னார்.
அதிகமான கட்டணத்தை வசூலிப்பதால், சட்டங்களில் உள்ள ‘ஓட்டைகளை’ தங்களுக்கு சாதகமாக இந்த ஏஜென்சிகள் பயன்படுத்திக் கொள்கின்றன. அதுமட்டுமல்லாது, ஊழலுக்கு இவை வழிவகுக்கின்றன என்று அவர் கூறினார்.
அரசாங்கங்கள் ஒப்பந்தங்கள் செய்துக் கொள்ளாமல், வியாபார ஒப்பந்தங்கள் நிகழ வாய்ப்புகளை வழங்குவதால், மனித கடத்தல் போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நாட்டில் ஏற்படுகின்றன என்று குளோரீன் குறிப்பிட்டார்.