
மும்பை, ஜூலை.13- மலேசியாவின் ஐ.ஹெச்.ஹெச். எனப்படும் சுகாதார பராமரிப்பு நிறுவனம், இந்தியாவின் ஃபோர்டீஸ் சுகாதார பராமரிப்பு நிறுவனத்தில் ரிம.2.3 பில்லியன் தொகையை முதலீடு செய்துள்ளது.
நிதி நெருக்கடியை சந்தித்து வரும் ஃபோர்டீஸ் நிறுவனத்தில், 40 பில்லியன் ரூபாயை ஐ.ஹெச்.ஹெச். நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இந்த ஃபோர்டீஸ் மருத்துவ நிறுவனம், இந்தியாவிலுள்ள 30 தனியார் மருத்துவமனைகளை நிர்வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஹெச்.ஹெச் நிறுவனத்தின் ஒரு பிரிவான சிங்கப்பூரின் Northern TK Venture நிறுவனத்திற்கு, ஃபோர்டீஸ் நிறுவனத்தின் 235.3 மில்லியன் பங்குகள் ஒதுக்கப் பட்டுள்ளன. அதன் வாயிலாக, அந்த இந்திய நிறுவனத்தின் 31% பங்குகள் கொண்டு, வாக்களிக்கும் உரிமையை Northern TK Venture நிறுவனம் பெறுகிறது.
ஃபோர்டீஸ் சுகாதார பராமரிப்பு நிறுவனத்துடனான ஒப்பந்தம், நான்காவது காலாண்டில் முழுமைப் பெறும் என்று ஐ.ஹெச்.ஹெச் நிறுவனம் எதிர்பார்க்கிறது. இவ்வருட நிதி ஆண்டின் லாபங்களுக்கு இந்த ஒப்பந்தத்தால் எவ்வித பாதிப்பும் நேராது என்றும் அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.
இந்தியாவில் தனியார் சுகாதார செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. போதுமான சுகாதார வசதிகள் கொண்டிராத அந்நாட்டில், மில்லியன் கணக்கான மக்களுக்கு காப்புறுதிகளை விரிவுபடுத்த அந்நாட்டு அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
அந்தக் காப்புறுதி திட்டங்கள் அமலுக்கு வந்தால், மணிப்பால் மற்றும் ஃபோர்டீஸ் தனியார் சுகாதார மருத்துவமனைகளுக்கு நன்மை ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.