Latestமலேசியா

மின்சாரம், தண்ணீர் இன்றி அவதியுறும் இந்தியக் குடும்பம்!

கூலாய், ஜூலை.16- மின்சக்தி மற்றும் தண்ணீர் வசதி இல்லாமல், கைவிடப்பட்ட வீட்டில் தனது எட்டு பிள்ளைகளுடன், கடந்த நான்கு ஆண்டுகளாக எஸ்.லோகம்பாள் என்ற இந்திய மாது குடித்தனம் நடத்தி வருகிறார்.

அந்தக் குடியிருப்பு பகுதியிலுள்ள இரும்புப் பொருட்களையும், மறுசுழற்ச்சி செய்யக் கூடிய பொருட்களையும் சேகரித்து, அவற்றை விற்பனை செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தான் அவர்கள் அன்றாட உணவை உண்கிறார்கள்.

அப்பொருட்களின் விற்பனை வாயிலாக அவர்களுக்கு அன்றாடம் ரிம.30-திலிரிந்து ரிம.50 வரை வருமானம் கிடைக்கும். ஒவ்வொரு மாதமும், அவர்களுக்கு நலன்புரி இலாகா ரிம.300-யை வழங்கி வருகிறது.

“என் பிள்ளைகள், அவர்களின் அடையாள அட்டைகளை தொலைத்து விட்டனர். அவற்றை மீண்டும் பெறுவதற்கு அபராதம் செலுத்த வேண்டியதால், அவர்கள் அதற்கு விண்ணப்பம் செய்யவில்லை. அடையாள அட்டைகள் இல்லாததால், அவர்களால் பள்ளிக்கோ அல்லது வேலைக்கோ செல்ல முடியவில்லை” என்று லோகம்பாள் தெரிவித்தார்.

“என் பிள்ளைகள் அனைவருக்கும் பிறப்பு பத்திரங்கள் உள்ளன. கடைக்குட்டிக்கு மட்டும் என்னால் பிறப்பு பத்திரத்தை எடுக்க முடியவில்லை” என்று அவர் கூறினார்.

லோகம்பாளிம் அடையாள அட்டையும் தொலைந்து போய்விட்டது. ஏற்கனவே அவரின் அடையாள அட்டை தொலைந்து போனதால், அதனை மீண்டும் பெறுவதற்கு அவர் ரிம.300-யை அபராதமாக செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டதால், தாம் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளவில்லை என்று அவர் சொன்னார்.

அண்மையில் சிறையிலிருந்து விடுதலையாகிய லோகம்பாளின் கணவரின் கால்களில் அடிப்பட்டுள்ளதால், அவரால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. தனது அண்டை வீட்டுக்காரர்கள், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பெருமளவில் உதவிகளை வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.

“எங்களுக்குத் தண்ணீர் உதவிகளை எனது அண்டை வீட்டாளர்கள் தான் தருகிறார்கள். அவர்கள் கொடுக்கும் தண்ணீரை, நான் பீப்பாய்களில் சேமித்து வைத்துக் கொள்வேன். வீட்டில் மின்சக்தி இல்லாத்தால், அண்டை வீட்டாளர்களின் மின்சக்தியை நாங்கள் அன்றாடம் கடனாக பெற்று வருகிறோம்” என்று அவர் சொன்னார்.

கைவிடப்பட்ட நிலையில் இருந்த வீட்டை, நான்காண்டுகளுக்கு முன்னர் நாங்கள் கண்டுப் பிடித்தோம். அதைச் சுத்தப் படுத்தி இங்கு வசித்து வருகிறோம். இப்போது இந்த வீட்டின் உரிமையாளர் திரும்பி வந்து விட்டார். எங்களை இந்த வீட்டிலிருந்து வெளியேறுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்” என்றார் அவர்.

லோகம்பாளின் இந்த அவலம் குறித்து கூலாய் மாவட்ட அலுவலகத்திற்கும், ஜொகூர் மாநில இந்திய தொழிலதிபர்கள் சங்கத் தலைவர் பி.சிவகுமாருக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளன.

அவர்களின் கோலத்தை நேரில் கண்ட சிவகுமார், அக்குடும்ப உறுப்பினர்களுக்கு முதலில் அடையாள அட்டைகளை பெற்றுத் தர தாம் முயற்சிக்கவிருப்பதாக தெரிவித்துக் கொண்டார்.

அந்தக் குடும்பத்தினர் தங்குவதற்கு பொது வீடு ஒன்றை ஏற்பாடு செய்துத் தர விருப்பதாக விவசாயம் மற்றும் விவசாய சம்பந்தப்பட்ட அமைச்சின் சிறப்பு அதிகாரியான எஸ்.ஜீவன் கூறினார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker