Latestஉலகம்

‘செல்பி’ எடுக்க விரும்பும் சிறுவனாக மாறிவிட்டார் டிரம்ப்!  -அர்னால்டு

வாஷிங்டன், ஜூலை-18 அமெரிக்க அதிபர் டிரம்ப், ஒரு ‘செல்பி’ எடுக்க விரும்பும் சிறுவனை போல ரஷ்ய அதிபர் முன்நின்று கொண்டிருந்ததாக பிரபல ஹாலிவுட் நடிகரும் முன்னாள் கலிபோர்னியா மாநில ஆளுனருமான அர்னால்டு ஸ்வாஷனேக்கர் தெரிவித்தார்.

உலக நாடுகளுக்கு மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டிரம்ப், புதிய சந்திப்பு பின்லாந்து நாட்டிலுள்ள ஹெல்ஸிங்கியில் நேற்று நடைபெற்று முடிந்தது. பல மணி நேரங்களாக நடைபெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் இருவரும் செய்தியாளர்ளைச் சந்தித்தனர்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவை சேர்ந்த 12 பேரின் தலையீடு இருப்பதாக இராணுவ உளவுத்துறை கூறியதை ஏற்று கொள்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த டிரம்ப், ரஷ்யா தலையிடவில்லை எனப் பதிலளித்தார்.

அமெரிக்கா உளவுத்துறையையே அவமானப்படுத்தும் அளவிற்கு நடந்து கொண்ட டிரம்பின் செயலுக்கு அமெரிக்க மக்கள் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் ஆளுநருமான அர்னால்டு, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ‘செல்பி’ எடுத்து கொள்ள விரும்பும் ஒரு சிறுவன் போல, ஓர் ஈரமான ‘நூடுல்ஸ்’ போல கைக் கட்டிக் கொண்டு ரஷ்ய அதிபர் புடின் முன் நிற்கிறார் என விமர்சித்துள்ளார்.

மேலும், புடின் சொல்வற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டு, நீங்கள் எங்கள் நீதித்துறை மற்றும் எங்கள் உளவுத்துறையின் அறிக்கைகளை விற்று விட்டீர்கள். நீங்கள் அமெரிக்காவின் அதிபர் என்பதை மறந்துவிடக்கூடாது என அர்னால்டு கருத்துரைத்தார்.

பனிப்போர் காலத்தில் முன்னாள் அதிபர் ரொனால்ட் ரேகனின் வலுவான சொற்கள் குறித்தும் அவர் நினையூட்டினார். முன்னதாக அமெரிக்க நாடாளுமன்ற மக்களவை அவை தலைவர் பால் ரயான், இது பற்றிக் கருத்துரைக்கையில், ரஷ்யா, அமெரிக்காவின் நட்பு நாடல்ல என்பதை டிரம்ப் முதலில் உணர வேண்டும் என வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker