Latestமலேசியா

தகுதியற்ற அதிகாரிகளே எங்களுக்கு தடை!, -மகாதீர்

கோலாலம்பூர், ஜூலை.20- பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசாங்கம் அமைத்தால், மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் சில, 100 நாட்களின் நிறைவேற்றப்படும் என்ற தங்களின் குறிக்கோளுக்கு, தகுதியற்ற அரசாங்க ஊழியர்கள் மற்றும் பழமையான சட்டங்கள் தடையாக அமைந்துள்ளன என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

அரசாங்க அதிகாரிகளில் சிலர் தகுதியற்றவர்களாக இருந்தனர் என்றும், அவர்களுக்குப் பதிலாக புதிய அதிகாரிகளை வேலைக்கு அமர்த்த வேண்டிய கட்டாயம் தங்களுக்கு ஏற்பட்டதாக அவர் கூறினார்.

“புதிதாக வேலைக்கு அமர்த்தப்பட்ட அந்த அதிகாரிகளுக்கு அனுபவம் குறைவாக உள்ளது. இது போன்ற தடைகளை நாங்கள் இப்போது சந்தித்து வருகிறோம்” என்று மகாதீர் மேலும் சொன்னார்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசாங்கம் அமைத்து 70 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், அவர்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் இரு வாக்குறுதிகள் நிறைவேற்றப் பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் 6 வாக்குறுதிகள் கூடிய விரைவில் நிறைவேற்றப் படும் தறுவாயில் இருப்பதாகவும், மேலும் 2 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான செயல்முறைகள் இதுவரை தொடங்கப் படவில்லை என்றும் அவர் சொன்னார்.

“100 நாட்களில் 10 வாக்குறுதிகள் நிறைவேற்றப் படும் என்று நாங்கள் கூறியுள்ள போதிலும், அதே சமயத்தில் இதர வேலைகளிலும் அக்கறை காட்ட வேண்டிய அவசியம் எங்களுக்கு உண்டு என்பதை அனைவரும் உணர வேண்டும்.

“முன்னாள் அரசாங்கத்தின் ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகங்கள் புதிய அரசாங்கத்தை பாதிக்கக் கூடாது என்ற அடிப்படையில், அரசாங்கத்தை ‘சுத்தப் படுத்த’ வேண்டிய அவசியம் எங்களுக்கு உண்டு” என்று நாடாளுமன்றத்தில் புக்கிட் பிந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்ட கேள்விக்கு மகாதீர் அவ்வாறு பதிலளித்தார்.

சில வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முன்னர், அவற்றை அமல்படுத்துவது குறித்தான சட்டத்திட்டங்களை பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.

குறிப்பாக, குடும்ப மாதர்களுக்கான ஓய்வூதிய திட்டமாக மாதந்தோறும் அவர்களுக்கு ரிம.50-யை வழங்குவதற்கு முன்னர், அதனால் ஏற்படக் கூடிய நஷ்டத்தை தாங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள அவசியம் உண்டு என்று மகாதீர் சொன்னார்.

இதனிடையில், பக்காத்தான் ஹராப்பான் கொள்கை அறிக்கையை பக்காத்தான் அரசாங்கம் புனித புத்தகங்களாக பயன்படுத்தவில்லை. தடைகளை சந்திக்கும் வேளைகளில், அவசியத்திற்கு ஏற்றார்போல், அதில் மாற்றங்கள் நிகழ்த்தப் படலாம் என்றும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

 

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker