Latestமலேசியா

தூக்கு மாட்டியதால் தான் வசந்தப் பிரியா இறந்தார்! –மருத்துவர்கள்

ஜோர்ஜ் டவூன், ஜூலை.20- கடந்த ஜனவரி மாதம் 24-ஆம் தேதியன்று, ஆசிரியர் ஒருவரின் கைத்தொலைப்பேசி காணாமல் போனது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையால் மனமுடைந்து தற்கொலைக்கு முயற்சித்து, சிகிச்சை பலனளிக்காமல் 13 வயது மாணவி எம்.வசந்தப் பிரியா மரணமடைந்தார்.

அவர் தூக்கில் தொங்கியதால் தான், அவருக்கு மரணம் நேர்ந்தது என்று நோயியல் நிபுணர் டாக்டர் சந்துரோத் நவீன் பங்கஜாக்‌ஷன் நீதிமன்ற விசாரணையில் இன்று தெரிவித்தார்.

தூக்குப் போட்டுக் கொண்டதால், அச்சிறுமியின் கழுத்தைச் சுற்றி, 22 செ.மீ அளவில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அதனை அடிப்படையாகக் கொண்டு, அவர் தூக்கில் அதிக நேரம் தொங்கியதால் அவருக்கு மரணம் நேர்ந்தது என்று டாக்டர் சந்துரோத் கூறினார்.

“கழுத்திற்கும் இரண்டு காறை எலும்புகளுக்கும் மத்தியில் அந்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளன” என்று பிரேத விசாரணை நடத்தும் நீதிபதி நோர்சல்ஹா ஹம்சாவிடம் அம்மருத்துவர் சொன்னார்.

ஆசிரியரால் நடத்தப்பட்ட விசாரணையில், தாம் குற்றஞ்சாட்டப் பட்டதால், மனமுடைந்து வசந்தப்பிரியா தூக்கு மாட்டிக் கொண்டார். அவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை கண்ட அவரின் தந்தை, அவரை காப்பாற்றி மருத்துமனையில் அனுமதித்தார்.

ஆனால், ஒரு வாரமாக வழங்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல், நினைவு திரும்பாமலேயே கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதியன்று வசந்தப் பிரியா மரணமடைந்தார்.

இதனிடையில், வசந்தப் பிரியாவின் இடது கையில் பல கீறல்கள் (பல்வேறான காலக் கட்டங்களில் ஏற்பட்டிருக்கலாம்) இருந்ததாகவும், டாக்டர் சந்துரோத் குறிப்பிட்டார். இந்த விசாரணை ஜூலை மாதம் 27-ஆம் தேதி தொடரும்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker