Latestமலேசியா

‘தேசத் துரோக’ கடிதம்; நஜிப்பின் அதிகாரியை விசாரிக்க கோரிக்கை

கோலாலம்பூர், ஜூலை.20- முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் அரசாங்கத்தைச் சேர்ந்த   உயர் உளவு அதிகாரி ஒருவர், அமெரிக்காவின் சிஐஏ அமைப்பின் இயக்குநர் ஜீனா ஹஸ்பெலுக்கு அனுப்பியுள்ள ‘தேசத் துரோக’ கடிதம் குறித்து, அந்த அதிகாரியிடம் விசாரணை மேற்கொள்ளப் பட வேண்டும் என்று தேசிய நாட்டுப்பற்றாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மலேசியாவின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கைகள் குறித்து மற்ற நாடுகளுக்குத் தெரிவிக்கக் கூடாது என்று ‘பாட்ரியோட்’ எனப்படும் தேசிய நாட்டுப்பற்றாளர் சங்கத்தின் தலைவரான (ஓய்வுப்பெற்ற) பிரிகேடியர் ஜெனரல் முகமட் அர்ஷாட் ராஜி கூறினார்.

கடந்த 14-ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி அரசாங்கம் தோல்வி அடைந்தாலோ, அல்லது குறைவான வாக்குப் பெருன்பான்மையில் வெற்றிப் பெற்றாலோ, தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு சிஐஏ அமைப்பு உதவ வேண்டும் என்று அக்கடிதத்த்தில் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

“சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு வல்லரசுகளின் மோதல்கள் வளர்ந்துக் கொண்டிருக்கும் வேளையில், அதன் வாயிலாக பயனடைய நஜிப்பின் அரசாங்கம் திட்டம் போட்டிருந்தது போலும். தென்சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தை ஆதரித்த வேளையில், அப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலையீடையும் நஜிப்பின் அரசாங்கம் ஆதரித்துள்ளது” என்று அவர் கூறினார்.

அதுமட்டுமல்லாது, தற்போதைய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், மேற்கத்திய கொள்கைகளுக்கு எதிரானவர் என்றும், யூதர்களை எதிர்ப்பவர் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதை அர்ஷாட் சாடினார்.

“தலைமைத்துவம் கொண்டிராத தலைவர் மற்றும் அரசாங்கம் தான் இவ்வாறான கேவலமான செயல்களில் ஈடுபடுவர்” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர், மலேசிய வெளிநாட்டு புலனாய்வு அமைப்பின் சார்பில், (முன்னாள்) பிரதமர் துறையின் ஆராய்ச்சி பிரிவின் உளவுத் துறை அதிகாரியான ஹசானா அப்துல் ஹமீட்டின் கையொப்பம் கொண்ட அக்கடிதம், ஜீனா ஹஸ்பெலுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

அந்தக் கடிதத்திற்கும் தமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும், அதனை எழுதுமாறு தாம் யாரிடமும் கேட்டுக் கொள்ளவில்லை என்றும் நஜிப் தெரிவித்துள்ளார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker