Latestவிளையாட்டு

மலேசிய கிண்ண கால்பந்து போட்டிக்கு தேர்வு- மிஃபா சாதனை!

கோலாலம்பூர், ஜூலை. 20 -மலேசிய பிரிமியர் லீக்கில் சிறந்த வெற்றிகளைப் பெற்று மலேசிய இந்தியர் கால்பந்து பேரவையின் மிஃபா அணி, மலேசிய கிண்ணப் போட்டிகளில் பங்கேற்கத் தகுதியைப் பெற்று சாதனை படைத்துள்ளது. மலேசிய கிண்ணப் போட்டிகளுக்கு தகுதி பெறும் முதல் இந்தியர் அணி மிஃபா என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய பிரிமியர் லீக்கில் யூ.கே.எம் அணியுடனான ஆட்டத்தில் 3-1 என்ற கோல்கணக்கில் வெற்றியை பதிவு செய்து மலேசிய கிண்ணப் போட்டிகளுக்கான தகுதியினை மிஃபா அணி அடைந்தது. மிஃபாவின் சார்பில் சீடி, ஷெர்மன், தினகரன் ஆகியோர் கோல்களை புகுத்தினர்.

மிஃபா அணி 19 ஆட்டங்களில் விளையாடி, 8 ஆட்டங்களில் வெற்றியும் 5 ஆட்டங்களில் சமநிலையும், 6 ஆட்டங்களில் தோல்வியும் கண்டு 29 புள்ளிகளோடு புள்ளிப் பட்டியலில் 3 ஆம் இடத்தில் உள்ளது.

இன்னும் 1 ஆட்டம் எஞ்சியுள்ளது. பிரிமியர் லீக்கில் புள்ளிப் பட்டியலில் முதல் 5 இடங்களை பெறும் அணிகள் மலேசிய கிண்ணப் போட்டிகளில் விளையாடும் தகுதியினை பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மிஃபாவின் இந்த சரித்திர வெற்றி குறித்து அதன் தலைவர் செனட்டர் டத்தோ டி.மோகன் கூறியதாவது:

இந்த வரலாற்றுச் சாதனைக்கு துணை நின்ற அத்துணை நல் உள்ளங்களுக்கும் நன்றி. குறிப்பாக மிஃபாவின் தலைமைப் பயிற்றுநர் கே.தேவன், நிர்வாகி துவான் ஏ.எஸ்.பி.ராஜன், மிஃபாவின் செயலாளர் அன்பானந்தன், மிஃபா நிர்வாகத்தினர், விளையாட்டாளர்கள், நன்கொடையாளர்கள் என அனைவருக்கும் நன்றி. இவர்கள் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமில்லை என அவர் குறிப்பிட்டார்.

பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ள மிஃபா அணியின் அடைவு நிலை போற்றுதலுக்குரியது. அந்த வகையில் நமது சமுதாய பெருமக்கள் அணிக்கு உதவிக்கரம் நீட்ட முன் வர வேண்டுமென அணியின் நிர்வாகி துவான் ஏ.எஸ்.பி ராஜன் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker