Latestஉலகம்

மியன்மாரில் தமிழ்த் தேர்வு: 4,000 மாணவர்கள் சான்றிதழ் பெறும் மாபெரும் விழா!

யாங்கோன், (மியன்மார்) ஜூலை.20- மியன்மாரின் தமிழ்க் கல்வி வளர்ச்சி மையத்தின் வழி, அந்நாட்டின் ஆரம்பத் தமிழ்க் கல்விப் பாட வகுப்புகளில் படித்துத் தேர்வு பெற்ற 4,000க்கும் அதிகமான மாணவர்களுக்கான தமிழ் மொழித் தேர்வுச் சான்றிதழ்களும் சிறப்புப் பரிசுகளும் வழங்கும் மாபெரும் நிகழ்வு ஜூலை 22ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை இங்கு நடைபெறுகிறது.

மயாங்கோன் நகர் (யாங்கோன்) லைன் மண்டபத்தில் காலை 8.30 மணி தொடங்கி மாலை 6.30 மணி வரை தேர்வுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். கிட்டத்தட்ட எட்டு மாநிலங்களைச் சேர்ந்த 116 பாடசாலைகளில் தொடக்க வகுப்பு முதல் 10 வகுப்பு வரையில் 6,000க்கும் அதிகமான மாணவர்கள் தமிழ்க் கல்வி பயின்றனர்.

இந்த மாணவர்களில் 4,000க்கும் அதிகமானோர் நாளை மறுதினம் 22ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை தேர்வுச் சான்றிதழ்களையும் பாராட்டுப் பரிசுகளையும் பெறுகின்றனர். கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் மியன்மாரில் தமிழ்க் கல்வி வளர்ச்சி மையம் தமிழ்ப்பாட வகுப்புக்களை நாடு தழுவிய அளவில் நடத்தி வருகிறது.

இதன் தலைவராக எல்.ஆர்.ஜி இளங்கோவன் மற்றும் பொதுச் செயலாளராக எஸ். கண்ணுச்சாமி ஆகியோர் பொறுப்பு வகித்து வருகின்றனர்.

தமிழ்ப்பள்ளிகள் இல்லாத நிலையில் மியன்மார் தமிழ் மாணவர்கள் தங்களின் தமிழ்ப் பாடங்களை தேசிய பள்ளி விடுமுறை தவணைக் காலங்களில் தமிழ்ப் போதனைக்கான வகுப்புகளில் பங்கேற்று படித்து வருகின்றனர்.

மியன்மாரில் தமிழைப் பேணும் இந்த முயற்சிகள் அண்மைய காலமாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி ‘வணக்கம் மலேசியா’விடம் குறிப்பிட்ட மியன்மார் தமிழ்க் கல்வி வளர்ச்சி மையத்தின் தலைவர் எல்.ஆர்.ஜி. இளங்கோவன், மியன்மார் மாணவர்களுக்கான பொருத்தமான தமிழ்ப் பாடத்திட்டத்தை தாங்கள் சொந்தமாகவே உருவாக்கி பாட வகுப்புகளை நடத்தி வருவதாக குறிப்பிட்டார்.

தமிழகம், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் தமிழ்ப்பாடத் திட்டங்களை அடிப்படையாக கொண்டு, நாங்கள் ஆய்வுகளை நடத்தி மியான்மார் தமிழ் மாணவர்களுக்கு பொருத்தமான பாடத் திட்டங்களை உருவாக்கி வழங்கி உள்ளதாக அவர் சொன்னார்.

தங்களின் மொழித்திறனை வளர்த்துக் கொள்ள போதுமான வாய்ப்புகள் இல்லாத சூழலில் இருந்து வரும் மியான்மார் மாணவர்களுக்காக நடத்தப்படும் இந்தத் தமிழ்ப் பாட வகுப்புகள் சிறந்த பலனை அளித்து வருகின்றன என்று இளங்கோவன் சொன்னார்.

இந்தத் தமிழ்த் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான தேர்வுச் சான்றிதழ் மற்றும் சிறப்பு பரிசளிப்பு விழாவில் தமிழ்க் குடும்பங்கள், பொது அமைப்புகள் , பெற்றோர்கள், ஆலயங்களின் நிர்வாகிகள், பாடசாலை ஆசிரியர்கள். மாணவமணிகள் மற்றும் இந்தத் தமிழ் வகுப்புகள் செவ்வனே நடத்தப்படுவதற்கு உதவி வரும் நன்கொடையாளர்கள் என பல தரப்பினர் கலந்து சிறப்பிக்க உள்ளனர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மியன்மாருக்கான இந்தியத் துணைத் தூதர் கலந்து கொள்கிறார்.

மேலும் விழாவின் போது சிங்கப்பூர் படையப்பா மணிமாறன் கலைக் குழுவினரின் கலைநிகழ்ச்சியும் இடம்பெறவிருக்கிறது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker