Latestமலேசியா

மாடர்ன் மருத்துவச்சியாக மாறிய விரிவுரையாளர்

கோலாலம்பூர்,ஜூலை.28- எந்த மகிழ்வும் வலியின்றி கிடைக்காது என்பதே பெண்ணுடலுக்கான பொது விதி. மகப்பேறுக்கு முந்தைய காலமாக இருந்தாலும் சரி மகப்பேறுக்கு பிந்தைய காலமாக இருந்தாலும் சரி பெண்கள் தங்களின் உடல்நலத்தைக் கவனிக்க வேண்டியுள்ளது. வழக்கமாக இந்தப் பெண்களுக்கு மருத்துவச்சி வேலைப் பார்ப்பவர்கள் வயதான பாட்டிகளாகவே இருப்பார்கள். ஆனால், அதை எல்லாம் ஒரு பொருட்டாகவே கருதாமல். ஒரு மாடர்ன் மருத்துவச்சியாக உருவெடுத்துள்ளார் விரிவுரையாளராக வேலைப் பார்த்து வந்த ரூபாவதி என்ற 27 வயது இளம்பெண்.

திருமணமாகி ஓர் அழகிய பெண் குழந்தைக்கு தாயான ரூபாவதி தான் கர்ப்பமாக இருந்தபோதுதான் இந்த தொழிலைத் தேர்ந்தெடுக்கும் எண்ணம் தனக்குள் தோன்றியதாகக் கூறியுள்ளார். குடும்பத்தைவிட்டு தூரமாக இருக்கும் சூழ்நிலையில் பிரசவத்துக்கும் முன்பும் பின்பும் தன்னையும் தனது குழந்தை ஷாலோம்மையும் பார்த்துக்கொள்ள பெரியவர்கள் யாரையும் ரூபாவதி எதிர்பார்க்கவில்லையாம். அவரே தனக்கானதையும் குழந்தைக்கானதையும் சுயமாகச் செய்து கொண்டாராம்.

கர்ப்பமாக இருந்தபோது மகப்பேறு பயிற்சிகளுக்குச் சென்று பிரசவத்திற்கு பிறகு தாய்மார்களையும் குழந்தைகளையும் எப்படிப் பராமரிப்பது என்று கற்றுக்கொண்டதுதான் ரூபாவதிக்கு கைக்கொடுத்ததாம்.

தன்னைப் போல் பட்டணத்தில் எத்தனையோ பெண்கள் இருப்பார்கள் என்பதை எண்ணிப் பார்த்த ரூபாவதி விரிவுரையாளர் பணியையும் விடத் துணிந்தார். முழுநேர இல்லத்தரசியாக மாறியவர், பிரசவமான தாய்மார்களையும் குழந்தைகளையும் பராமரிக்கும் தொழிலில் ஈடுபடலானார்.

பிரசவமான தாய்மார்களையும் குழந்தைகளையும் குளிப்பாட்டுவது, தாய்க்கு பத்திய உணவு சமைத்துக் கொடுப்பது, தாய்-சேய்க்கான உடம்புபிடி என அனைத்தும் செய்து தருகிறார் ரூபாவதி. அதுவும் இந்த நவீன காலத்திற்கு ஏற்றவாறு இச்சேவையை செய்து வருகிறார் அவர்.

காலையில் தொடங்கி மாலை 3 மணி வரையில் இந்த சேவைகளை ரூபாவதி வழங்கி வருகிறார். போதுமான வருமானம் கிடைக்கும் வேளை, தனது மகளுடன் அதிக நேரம் செலவிட முடிவதாக சொல்கிறார் ரூபாவதி.

இதை எல்லாம் தவிர்த்து, குழந்தைப்பேறு இல்லாத பெண்களுக்கு ரூபாவதி இலவசமாக ஆலோசனைகள் வழங்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker